சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு, மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு வில்லிவாக்கத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமி கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததும், உதவி ஆய்வாளர் வாசு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சிறுமியிடம் நடந்ததை கேட்டு அதிர்ந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் வாசுவை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் காவல் துறையினர் புகார் ஏதும் பெறாமல், வழக்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.

இந்த தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காவல் நிலைய குழந்தை நல அலுவலர் மூலம் விசாரணை நடத்தியதில், கடந்த 4 மாதமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளரை பிடித்து விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். வேலியே பயிரை மேய்வது போல், உதவி ஆய்வாளரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்