பன்னிரெண்டு வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் ‘குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018’ மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 12 வயது சிறுமியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி குற்றவியல் சட்ட (திருத்தம்) அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அந்த சட்டத்துக்கு மாற்றாக, தற்போது இந்த ‘குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018’ கொண்டுவரப்படுகிறது.

இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன.

மக்களவையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ‘குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018’-இன் படி,

12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். மேலும் அது ஆயுள் சிறையாகவும் நீட்டிக்கப்படலாம்.

16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பலாத்கார வழக்கில், குறைந்தபட்ச தண்டனையானது 10 ஆண்டு சிறையிலிருந்து, 20 ஆண்டு சிறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதை ஆயுள் சிறையாக நீட்டிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த மசோதாவின் மூலமாக பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸார் மற்றும் நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வகையான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணை கட்டாயமாக 2 மாதங்களுக்குள்ளாக முடிக்கப்பட வேண்டும்.

அதேபோல், மேல்முறையீடுகள் மீதான விசாரணை 6 மாதங்களுக்குள்ளாக நிறைவு செய்யப்பட வேண்டும்.

16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்கப்படாது.

அத்தகைய, வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் ஜாமீன் மனுக்கள் மீது உத்தரவிடும் முன்பாக, அதன் மீது பதிலளிக்க அரசுத் தரப்பு வழக்குரைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதிக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும்.