சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல், தலைநகரில் போராட்டம்

0
347

சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் இன்று (14/04/2018) அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த வாரத்தில் சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

சிரியா அரசால் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களை குறைத்து, அவற்றின் பயன்பாட்டை ஒழிக்க வேண்டியது அவசியம் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார் . அமெரிக்கா, பிரான்சோடு சேர்ந்து பிரிட்டன் நடத்துகின்ற தாக்குதலில் பொது மக்களின் உயிரிழப்பை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே கூறியிருந்தார் .

சிரியா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பதில் நடவடிக்கை இல்லாமல் போகாது என்று ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

சிரியா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.

அழிவையும், நாசத்தையும் தவிர மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதலால் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என்று இரான் அதிபர் ஹசன் ரூஹானி கண்டித்துள்ளார்.

பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இது மோசமான மற்றும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்று சிரியா கூறியுள்ளது. சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க கூட்டணிப் படைகளின் 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரியா தடுத்து நிறுத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது .

அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அதில் 3 பொது மக்கள் காயமடைந்ததாகவும் சிரியாவின் அரசு செய்திகள் கூறுகின்றன .

அமெரிக்கக் கூட்டணிப் படைகளின் தாக்குதலை எதிர்த்து சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம். ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு. ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடம் போன்றவைத் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி கூறியுள்ளார் .

டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.

தையும் படியுங்கள்: கர்நாடக தேர்தல்: வெல்வது யார்?; மாறும் கருத்துக் கணிப்பு முடிவுகள்; முந்துகிறதா பாஜக?

இதையும் படியுங்கள்: உன்னாவ், கத்துவா பற்றிய கார்ட்டூன்கள் (தொகுப்பு)

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here