சிரிப்புக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும், சிரிப்பதற்கு யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை எனவும் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரேணுகா சவுத்ரி விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவையில் கடந்த பிப்.7ஆம் தேதியன்று, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, தேசிய அடையாள அட்டையை (ஆதார்) அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததாத் தெரிவித்தார். மேலும் இதனை காங்கிரசார், தாங்கள்தான் இத்திட்டத்தினை உருவாக்கியதாக பெருமை கொள்கின்றனர் எனவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

அப்போது அவையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரேணுகா சவுத்ரி மிகவும் பலமாக சிரித்தார். இதற்கு பிரதமர் மோடி, “ராமாயணத் தொடருக்குப் பின்னர் இப்போதுதான் இதுபோன்ற சிரிப்பைக் கேட்கிறேன்” என்றார். ராமாயணத்தில் வரும் எதிர்மறையான பெண் கதாபாத்திரத்துடன் ரேணுகா சவுத்ரியை ஒப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்தார். இதற்கு பிரதமர் எப்படி இதுபோன்று பேசலாம் எனவும் ரேணுகா சவுத்ரி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, சிரிப்புக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும், சிரிப்பதற்கு யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை எனவும் பிரதமர் மோடியை விமர்சித்தார். மேலும் அவர், “ஐந்தாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் என்னை, பிரதமர் மோடி எதிர்மறையான கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார். தங்களுக்காக எப்படி பேச வேண்டும் என்பதை இன்றைய காலத்தில் பெண்கள் அறிந்து வைத்துள்ளதை பிரதமர் மோடி மறந்து விட்டார். பெண்களுக்கு எதிரான அவரது மனநிலையை இது காட்டுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்