அமெரிக்க அதிபர் டிரம்ப் பெற்றோரை இழந்த 2 மாதக் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் சிரித்த முகத்துடன் கட்டை விரலை உயர்த்தியபடி போஸ் கொடுத்துள்ளார். டிரம்பின் இந்தச் செயலுக்கு பலரும் தமது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், எல் பஸோ (EL PASO) என்ற இடத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் நு‌ழைந்த நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர். அந்தத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் பெற்றோரை இழந்த 2 மாதக் குழந்தையுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்த புகைப்படத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. டெக்சாஸ் தாக்குதலின் போது பாவ்ல் என்ற இரண்டு மாதக் குழந்தையின் தாயும் தந்தையும் கொல்லப்பட்டனர். 

அப்போது தாயின் கையில் இருந்த குழந்தை பாவ்ல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டெக்சாஸ் மாகாணத்துக்கு வருகை தந்த போது குழந்தையை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி குழந்தையை கையில் ஏந்தி போஸ் கொடுத்த டிரம்பின் மனைவி மெலேனியா புகைப்படத்துக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்தார். அருகில் நின்ற டிரம்ப் தன் கட்டைவிரலை உயர்த்தி சிரித்தபடியே போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெற்றோரை இழந்த குழந்தையிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள என்ன இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்தக் குழந்தைக்காக அமெரிக்க அதிபர் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும் என்றும், புகைப்படத்தையாவது தவிர்த்து சோகத்தை பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.