கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டி மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு வங்க மாநில அரசை கவிழ்க்க வேண்டும் என்று மோடி – அமித் ஷா சதி செய்து வருவதாகவும்  குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் ரோஸ் வேலி, சாரதா சிட்பண்ட்ஸ் ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார். அவர் தற்போது கொல்கத்தா போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்தபோது, பல கோப்புகள காணாமல் போனதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக விசாரிப்பதற்காக பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை என்றும், ஆகவே அவர் கைது செய்யப்படலாம் என்றும் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியிருந்தனர். 

ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காவல்துறைக்கு சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் அளித்தனர்.  அதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு செல்லுமாறு சிபிஐ அதிகாரிகளை  காவல்துறை அறிவுறுத்தியது.அதேசமயம், சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து சென்றனர். ராஜீவ் குமாரை விசாரிப்பதற்கு உரிய ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் உள்ளனவா என்று அவர்கள் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. 

பின்னர், சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, காவல்நிலையத்துக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். அழைத்துச் செல்லப்பட்ட சிபிஐ அதிகாரிகள் பின்னர் போலீஸார் விடுவித்துவிட்டனர். கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தேசிய பாதுகாப்பு தலைவர் அஜித் டோவலின் உதவியோடு மோடி இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறிய மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மம்தா பானர்ஜி, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்று போராட்டத்தைத் துவக்கினார்.

தங்களை எதிர்க்கும் மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிபிஐ அமைப்பை அவர்கள் ஏவி விட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும். மத்திய அரசுக்கு எதிரான எனது போராட்டத்துக்கு அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மமதா பானர்ஜி கெட்டுக் கொண்டார்.

மம்தாவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாயாவதி, அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு கொடுப்பதற்காக இன்று 12 மணியளவில் அர்விந்த் கெஜ்ரிவால் கொல்கத்தா வரவுள்ளார்.

இதனிடையே, சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தது குறித்து உச்சநீதிமன்றத்தை நாட சிபிஐ முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here