சிபிஐ அமைப்பை சிதைக்க முயற்சிகள் நடந்தன. அந்த அமைப்பின் நேர்மையை , இறையாண்மையை காப்பாற்ற நான் விரும்பினேன் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ அமைப்பை சிதைக்க முயற்சிகள் நடந்ததாக இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா குற்றம் சாட்டினார்.

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா முக்கியத்துவம் இல்லாத வேறு துறை பதவிக்கு மாற்றப்பட்டார். இது குறித்து அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் – சிபிஐ என்பது உயர் பொது இடங்களில் நடக்கும் ஊழலைக் கையாள்வதில் பிரதான விசாரணை நிறுவனமாக உள்ளது. சிபிஐ நிறுவனத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. சிபிஐ சுதந்திரமான நிறுவனம். சிபிஐ நிறுவனத்தின் நேர்மையயும், இறையாண்மையயும் நிலைநாட்ட முயன்ற போதெல்லாம் அம்முயற்சிகள் நசுக்கப்பட்டன.

என் மீது பகைமை கொண்ட ஒரே ஒருவர் (ராகேஷ் அஸ்தானா – பெயரை அலோக் வர்மா குறிப்பிடவில்லை) கூறிய அடிப்படையற்ற புகார் மீது இந்த நடவடிக்கை எடுத்திருப்பது கவலை தருகிறது. சிபிஐ அமைப்பை சிதைக்க முயற்சிகள் நடந்தன. அந்த அமைப்பின் இறையாண்மையை, நேர்மையைக் காப்பாற்ற நான் விரும்பினேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தாலும், சட்டப்படியான எனது செயல்பாடுகள் தொடரும்’ என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்த அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநர் பணியில் அமர்த்தப்பட்டார். இருப்பினும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் முடிவு செய்யும் வரை, அலோக் வர்மாவால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு புதன்கிழமை இரவு கூடி விவாதித்தது. அந்தக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடம்பெற்றுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது பிரதிநிதியாக, நீதிபதி ஏ.கே.சிக்ரியை நியமித்தார். புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது.

கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்த வழக்கு தொடர்பாக ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருப்பதாகக் கூறினார்.
ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான குழு சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர்.

நீக்கம் செய்வதற்கு மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது தரப்பு நியாயத்தை உயர்நிலைக் குழு முன் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார், மேலும், அவரை தண்டிக்காமல், அவருக்கு 77 நாள்கள் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தினார்.
ஆனால், அதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிபிஐ இயக்குநரான அலோக் குமார் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் எழுந்ததையடுத்து இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்பின்னர் அலோக் வர்மாவின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 24ஆம்தேதி அதிகாலை 1 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதன்பின்னர் அலோக் வர்மாவின் இடத்தில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.

கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

Courtesy : Indian Express

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்