பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக்குழு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அவரது பணியிலிருந்து நீக்கியது.

அலோக் வர்மாவை நீக்க எதிர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் உயர்நிலைக் குழு விவாதித்து இம்முடிவை எடுத்ததாக செய்திகள் கூறுகின்றன.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்த அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநர் பணியில் அமர்த்தப்பட்டார். இருப்பினும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் முடிவு செய்யும் வரை, அலோக் வர்மாவால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு புதன்கிழமை இரவு கூடி விவாதித்தது. அந்தக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடம்பெற்றுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது பிரதிநிதியாக, நீதிபதி ஏ.கே.சிக்ரியை நியமித்தார். புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது.

கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்த வழக்கு தொடர்பாக ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருப்பதாகக் கூறினார்.
ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான குழு சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர்.

நீக்கம் செய்வதற்கு மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது தரப்பு நியாயத்தை உயர்நிலைக் குழு முன் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார், மேலும், அவரை தண்டிக்காமல், அவருக்கு 77 நாள்கள் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தினார்.
ஆனால், அதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிபிஐ இயக்குநரான அலோக் குமார் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் எழுந்ததையடுத்து இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்பின்னர் அலோக் வர்மாவின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 24ஆம்தேதி அதிகாலை 1 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதன்பின்னர் அலோக் வர்மாவின் இடத்தில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.

கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம், வரும் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது .

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அனுப்பிய போது அவர் டேபிளில் இருந்த முக்கியமான வழக்குகள் இவைதான்

ரஃபேல் விமான ஊழல், மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு என நீளுகிறது அலோக் வர்மாவின் பட்டியல் .

அலோக் வர்மா விசாரணை செய்த வழக்குகள்

பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முன்பு வரை அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை. ரஃபேல் விமான ஊழலில் தொடங்கி, மருத்துவ கவுன்சிலிங்கில் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு என இந்தியாவில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளின் விசாரணைகளை அவர் மேற்கொண்டு வந்தார்.

ரஃபேல் போர் விமான ஊழல்

முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக அக்டோபர் 4ஆம் தேதி 132 பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றினை அளித்தபோது அதைப் பெற்றுக் கொண்டார் அலோக் வர்மா. புகாரை சரிபார்க்கும் செயல்முறை நடந்திருக்கிறது.

இந்திய மருத்துவ கவுன்சில் ஊழல்

மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குதூஸியிடம் இந்திய மருத்துவக் கவுன்சில் ஊழல் வழக்கில் லஞ்ச பேரம் நடத்தியது தொடர்பான வழக்கினை விசாரித்து வந்தார் அலோக் வர்மா. எல்லா விசாரணைகளும் முடிந்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் கையெழுத்துக்காக காத்திருந்தது

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல்

தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருந்த போது, அக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என். சுக்லா மீது வழக்கு தொடரப்பட்டது. அது தொடர்பான வழக்கு கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. அலோக் வர்மாவின் கையெழுத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் வழக்கு அது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதிச் செயலாளர் ஹஸ்முக் அதியா வழக்கு

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, நிதி மற்றும் வருவாய்த் துறை செயலாளராக பணியாற்றும் ஹஸ்முக் அதியா மீது கொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை. ஹஸ்முக் அதியா நிரவ் மோடிக்கும், மெஹூல் சோக்ஸிக்கும் உதவியதாக குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் செயலர் பாஸ்கர் குல்பே

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் செயலர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான பாஸ்கர் குல்பே மீதான வழக்கு ஒன்றினை விசாரித்து வருகிறார் அலோக் வர்மா.

லஞ்ச வழக்கு

டெல்லியில் இருக்கும் ஒரு தரகரின் வீட்டில் அக்டோபர் முதல்வாரம் ரெய்டு நடந்தது. அந்த ரெய்டின்போது பப்ளிக் செக்டார் யூனிட் அப்பாய்ண்ட்மெண்ட்டுகளிற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வைக்கப்பட்ட 3 கோடி ரூபாயைப் பற்றிய கோப்புகளை கண்டுபிடித்தனர் சிபிஐ அதிகாரிகள். அவர் மீதான வழக்கினையும் விசாரணை செய்து வருகிறார் அலோக் வர்மா.

ஸ்டெர்லிங் பயோடெக் நிதி மோசடி வழக்கு

குஜராத்தை சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நடத்திய தொழிலதிபர் நிதின் ஜெயந்திலால் சந்தசரா பொதுத்துறை வங்கிகளில் இருந்து 5300 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு, கடனை செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டார். இந்த வழக்கில் சிபிஐ இணை இயக்குநரான ராகேஷ் அஸ்தானா புகார் இருந்தது . கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றஞ்சாட்டியதில் ராகேஷ் அஸ்தானா மீதும் லஞ்ச ஒழிப்பு வழக்கில் ஒரு புகாரை பதிவு செய்தது.சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அனுப்பிய போது அவர் டேபிளில் இருந்த முக்கியமான வழக்குகள் இவைதான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here