சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிபிஐ இயக்குநரான அலோக் குமார் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் எழுந்ததையடுத்து இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ், இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மத்திய அரசு தன் மீது மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், 2018 அக்டோபர் 23-ஆம் தேதி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்த ஒரு உத்தரவையும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை பிறப்பித்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யுமாறு அவர் கோரியிருந்தார். அந்த உத்தரவுகள், அதிகார வரம்பை மீறியதாகவும், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 19, 21 ஆகியவற்றை மீறிய வகையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அந்த மனு மீது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே. கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது, அலோக் குமார் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் அந்த ஆணையமும் அறிக்கை தாக்கல் செய்தது.

இதைத் தொடர்ந்து அந்த மனு மீது டிசம்பர் 6-ஆம் தேதி மீண்டும் விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், அலோக் குமார், மத்திய அரசு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியோரின் இறுதி வாதங்களைக் கேட்டறிந்த பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், மத்திய அரசு உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here