சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு – நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் எல்.ஷாஜிசெல்லன்

0
221

உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000 பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கருணை மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

நீட் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் பல்வேறு தவறுகள் இருந்தன. இந்த தவறுக்கு சிபிஎஸ்இ தான் முழுக் காரணம். குறிப்பாக பாசுமதி அரிசி புதிய ரகம் என்பதற்கு ‘புதிய நகம்’, வெளவ்வால் என்பது ‘வெளனவால்’ என்றும், இடை நிலையை ‘கடை நிலை’ என்றும், ரத்த நாளம் என்பது ‘ரத்த நலன்கள்’ போன்ற பல்வேறு தவறுகள் இருந்தன. இதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24,000 மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேசிய அளவில் நீட் தரவரிசைப் பட்டியலில் முதன்மை இடங்களில் அதிக அளவில் தமிழக மாணவர்கள் வருவர். இதனால் தமிழக மாணவர்களுக்கு அதிக அளவில் மருத்துவ சீட் கிடைக்கும்.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். அவ்வாறு மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் எங்கள் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என்பதற்காக கேவியட் மனு தாக்கல் செய்வோம். பின்னர் விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம் என்று மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் எல்.ஷாஜிசெல்லன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here