சினிமாவில் இருக்கிற ஆணாதிக்கத்தை உடைத்தவர் நயன்தாரா

2
367

(நவம்பர் 18, 2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

டயானா மரியம் குரியன் என்ற பத்தொன்பது வயது இளம் பெண் சினிமாவில் காலடி எடுத்து வைத்த போது அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வருவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டயானா மரியம் குரியனுக்கே அப்படியொரு எண்ணம் இருந்திருக்காது.

சத்தியன் அந்திக்காடு தனது ‘மனசின் அக்கரா’ படத்தில் டயானா மரியம் குரியனை நயன்தாரா என்ற பெயரில் அறிமுகப்படுத்தியபோது அவர் அதிகம் அறியப்படாத மாடல். அவரது புகைப்படத்தைப் பார்த்த சத்தியன் அந்திக்காடு தனது, ‘மனசின் அக்கரா’ படத்தில் அவரை நாயகியாக்கினார்.

மலையாளத்தின் முன்னணி நடிகையான ஷீலா, பல வருடங்களுக்குப் பிறகு ‘மனசின் அக்கரா’ படத்தில் நடித்ததால் அனைவரது கவனமும் ஷீலாவின் மீது இருந்தது. வெளுத்த வெள்ளந்தியான மலையாளப் பெண் என்ற அளவில் மட்டுமே நயன்தாரா அப்படத்தில் கவனிக்கப்பட்டார்.

அதையடுத்து நடித்த ‘விஸ்மயதம்பத்து’, ‘நாட்டுராஜாவு’, ‘தஸ்கரவீரன்’, ‘ராப்பகல்’ ஆகிய படங்களில், ‘ராப்பகல்’ படம் நயன்தாராவின் திறமையை ஒரளவு வெளிச்சமிட்டு காட்டியது. ‘தஸ்கரவீரனும்’, ‘ராப்பகலும்’ 2005 இறுதியில் வெளிவருவதற்கு முன்பே ‘ஐயா’ படத்தின் மூலம் நயன்தாரா தமிழில் அறிமுகமானார்.

மலையாளத்தில் அதுவரை வெள்ளந்தியான குடும்பப் பெண்ணாக காட்சியளித்த நயன்தாரா, ‘ஐயா’வில் முற்றிலுமாக மாறினார். குட்டை பாவாடையுடன், தொப்புள் தெரிய அவர், ‘டும் டும் பிப்பீ டும் டும் பிப்பீ எப்போ’ என்று குதித்தாடியபோது, அதுவரை ரசிகர்களின் மனதில் இருந்த வெள்ளந்தியானப் பெண் கரைந்து போனாள்.

அன்று நயன்தாரா அளித்த கலாச்சார அதிர்ச்சி இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. அதுதான் இன்றும் துணிச்சல் மிக்கவராக அவரை நிலைத்து நிற்க வைத்திருக்கிறது.

முன்னணி நாயகிகள் செய்யக் கூடாதவையாக தென்னிந்திய சினிமாவில் வரையறுக்கப்பட்ட அனைத்து ஆகம விதிகளையும் நயன்தாரா உடைத்தார். ‘சிவகாசி’, ‘குசேலன்’, ‘சிவாஜி’ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார், கௌரவ வேடத்தில் நடித்தார், கிளாமராக நடித்துக் கொண்டே புராணப் படத்தில் சீதையாக தோன்றினார். கிளாமரின் எல்லை இதுதான் என்று வரையறுத்தபோது, ‘பில்லா’ படத்தில் பிகினி உடையில் தோன்றினார்.

நயன்தாராவின் தனித்தன்மை அவரது தன்னம்பிக்கையிலிருந்து வருகிறது. ‘அந்த நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்’, ‘இவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கதையே கேட்க மாட்டேன்’, ‘சம்பளத்தை குறைத்துக் கொள்வேன்’ என்றெல்லாம் அவர் உருகியதில்லை. அவருக்கு எல்லாமே ஒன்றுதான், எல்லோருமே ஒன்றுதான்.

தெலுங்கில் இளம் நடிகர்களுடன் நடித்துக் கொண்டே, பாலகிருஷ்ணாவுடன் ‘ஸ்ரீராம ராஜ்ஜியத்தில்’ சீதையாக நடித்தார். அவரைப் பொறுத்தவரை நடிப்பு, அவரது தொழில். சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பிறகு, ‘இது நம்ம ஆளு’ படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவர் மறுக்கவில்லை. முன்னாள் காதலருடன் நடிக்கிறார் என்ற வியப்பும், குறுகுறுப்பும் மற்றவர்களுக்குதான். அவருக்கில்லை. அதனால்தான், படம் முடிந்த பிறகு, இன்னொரு பாடலை படமாக்க வேண்டும் என்று சிம்பு சொன்ன போது, முடியாது என்று அவரால் சொல்ல முடிந்தது.

இரண்டு காதல் தோல்விகளிலிருந்து மீண்டு, மூன்றாவதாக ஒருவரை காதலிக்கும் அவரது துணிச்சலும், வெளிப்படைத்தன்மையும் ஆணாதிக்க சமூகத்தில் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. நயன்தாரா சாதாரண ‘பைங்கிளி’ பெண்ணல்ல என்பது இப்போது கடைகோடி ரசிகனுக்கும் தெரியும். நயன்தாராவின் நடிப்பும், கவர்ச்சியும் ஒரு தோற்றம் மட்டுமே என்பதும் அவனுக்கு தெரியும்.

‘அனாமிகா’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக தெலுங்குப் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தடை விதித்தார்கள். தமிழைவிட தெலுங்கில் அதிக சம்பளம். தடை விதிக்கப்பட்டபோது நயன்தாராவுக்கு தமிழைவிட தெலுங்கில்தான் அதிக மார்க்கெட், அதிக வாய்ப்பு. அவர் அடுத்தநாளே தெலுங்குப்பட தயாரிப்பாளர்களிடம் சரணாகதி அடைவார் என எதிர்பார்த்தனர். ஆனால், நயன்தாரா அதுபற்றி பேசவே இல்லை. சரியாகச் சொன்னால் கண்டு கொள்ளவேயில்லை. பதிலாக தமிழில் கவனம் செலுத்தினார்.

இப்போது, தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய ஆசையிருக்கிறது. ஆனால், நயன்தாராதான் அதற்கு தயாராக இல்லை. அவர் நடிக்கும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் ஓடுகின்றன. குறிப்பாக, நாயகி மையப் படமான ‘மாயா’, தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் கௌரவமான வெற்றியை பெற்றிருக்கிறது. நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தனர். அவரது படங்களோ இப்போது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெறுகின்றன.

எந்தப் படமாக இருந்தாலும், யார் நாயகனாக இருந்தாலும், படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்பது நயன்தாராவின் கொள்கை. நடிகர்களை மையப்படுத்தி வியாபாரம் நடக்கும் சினிமாவில் ஒரு நடிகை இப்படியொரு நிபந்தனை விதிப்பதும், அதனை தொடர்ச்சியாக கடைபிடிப்பதும் அதிசயம். நயன்தாராவின் தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

ஒரு நடிகை பத்து வருடங்கள் சினிமாவில் இருப்பது என்பது, ஓய்வுபெறும் நிலை. ஆனால், பத்து வருடங்களுக்குப் பிறகும் நாயகியாக நின்று ஆடுகிறார் நயன்தாரா.

அழகு, திறமையைத் தாண்டி நயன்தாராவின் துவண்டு போகாத துணிச்சலும், மரியாதையை இழக்காத மானமும், தளர்ந்துவிடாத தன்னம்பிகையும்தான் அவரை இந்த உயரத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது.

2 கருத்துகள்

  1. /இரண்டு காதல் தோல்விகளிலிருந்து மீண்டு, மூன்றாவதாக ஒருவரை காதலிக்கும் அவரது துணிச்சலும், வெளிப்படைத்தன்மையும்/ ஆணாதிக்க சமூகத்தில் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஓஹோ அப்போ, பெண் சுதந்திரம் என்பது பலரை காதலிப்பதும், அதை கூறிக்கொள்வதிலும்தான் உள்ளதா. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஒருவரோடு வாழ்வது கவுரவம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட கூடாது. செய்தி எழுதியவருக்கு, எது பெண் சுதந்திரம், எது அடிமைத்தனம் என்ற அடிப்படை புரிதல் இல்லை என்பது தெளிவாகிறது. மற்றபடி இது ஒரு நல்ல கட்டுரை

  2. கேரள இறக்குமதி நடிகைகள் ஆணாதிக்கத்தை கடந்து பெண் சுதந்திரத்தின் எல்லையையும் மீறிவிட்டதால்தான் கேரளாவில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் பதினைந்து மண முறிவுகள்[விவாகரத்து ] நடக்கிறது

ஒரு பதிலை விடவும்