சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு எதிராக ரசிகர்கள் சிலர் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால் இந்திய அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பிசிசிஐ சார்பில் போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பிசிசிஐ அளித்த புகார் குறித்து முக்கிய அதிகாரி கூறுகையில், “ஆஸி. ரசிகர்கள் நடந்து கொண்டவிதம், பேசிய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஆஸி. பயணம் கசப்பானதாக அமைந்திருக்கிறது. நாகரிகமான சமூகத்தில் இனவெறிப் பேச்சு தொடர்கிறது. ஐசிசியும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் பொறுப்புடன் நடந்து, மாற்று வழியைத் தேடாவிட்டால், கிரிக்கெட் விளையாட்டு நன்றாக அமையாது. அதிலும் தற்போதுள்ள சூழலை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் அணி வீரர்கள் மீதான இனவெறி வார்த்தைகளை ஏற்கமுடியாது” எனத் தெரிவித்தார்.
போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தது. அப்போது 2-வது செஷன் முடியும் தறுவாயில், இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லைக் கோடு அருகே ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார். இந்திய வீரர்களை குறிவைத்து பார்வையாளர்கள் சிலர் பேசியதை சிராஜ் கவனித்துள்ளார். இதனால் அவர் பந்துவீச்சை நிறுத்தினார். பின்னர் நடுவர் மற்றும் சக வீரர்களிடம் இந்த தகவலைகூறினார். இந்திய வீரர்களை கிண்டல் செய்த 6 ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 10 நிமிடத்திற்குபிறகு போட்டி தொடங்கியது.

இனவெறியை தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.