சிஏஏ போராட்டம் : 42 நாட்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுவன்

A minor boy has spent 42 days in prison in connection with the protest against the Citizenship Amendment Act in Lucknow

0
1128

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக  உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதில் சில இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்கள் உள்பட பொது சொத்துக்களை சேதப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

19 ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு சிறுன் உள்பட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் வயது என்ன என்று காவல்துறையினர் கேட்டபோது 18 என கூறவும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இந்நிலையில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கைதானவர்களிடம் இருந்து ரூ. 2 கோடியே 59 லட்சம் இழப்பீடு வசூலிக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது கைதான சிறுவனின் ஆதார் கார்டை பார்த்தபோது அச்சிறுவனுக்கு 15 வயது மட்டுமே என்பது தெரியவந்தது.

15 வயது சிறுவனை கைது செய்தால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில்தான் அடைத்திருக்க வேண்டும். ஆனால் இச்சிறுவனோ ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான். இத்தகவல்களை அறிந்த சிறுவனின் பெற்றோர்கள் அவனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காட்டி சிறுவனை ஜாமீனில் எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஜனவரி 19 ஆம் தேதி சிறுவனுக்கு ஜாமீன் கிடைத்தும், ரூ. 50 ஆயிரம் பிணைத்தொகை கட்டி ஜாமீனில் செல்லலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டதால் அவரால் உடனடியாக ஜாமீனில் வரமுடியவில்லை. இதனால் 42 நாள் ஜெயிலில் தவித்த சிறுவன் கடந்த 1 ஆம் தேதி தான் ஜாமீனில் வெளிவந்துள்ளான்.

அவர் கூறுகையில், சம்பவத்தன்று பரிவர்த்தன்சவுக் பகுதியில் அமைதியாக நடைபெற்ற போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது நான் கடைக்குள் மறைந்து நின்றேன். வெளியே போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றது. நான் அந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

நடைபெற்ற போராட்டத்தால் எனது நண்பருக்கு காலில் காயம் ஏற்பட்டது. வன்முறை நின்றதும் நான் என் நண்பரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். ஆனால் காவல்துறையினர் என்னை கைது செய்துவிட்டனர் என  அவர் கூறினார்.

கைதான சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக லக்னோவில் தங்கி கூலி வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here