சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது மத்திய பிரதேச அரசு

0
275

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முதன்முதலாக தனது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

கேரளாவைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும், ராஜஸ்தான் சட்டசபையிலும், மேற்குவங்க மாநில சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஐந்தாவது மாநிலமாக, கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆளும் மத்திய பிரதேச மாநில சட்டசபையில் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இச்சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை மீறியதாகும். இச்சட்டம் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களை ஏற்படுத்தி உள்ளது. என் பி ஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலும் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அச்சட்டத்துக்கு எதிராக 5 மாநிலங்கள் இதுவரை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here