இந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளை தடை செய்யலாம் என்று மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பிரபலமான மருந்துகளும் இடம் பெற்றுள்ளன.

எனவே, அந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

2016-ஆம் ஆண்டு மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்பேரில் 349 வகையான மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தப் பட்டியலில் சாரிடான் (Saridon), கோரக்ஸ் (Corex), டி கோல்ட் டோட்டல் (D Cold Total), பென்சிடைல் (Phensedyl), விக்ஸ் ஆக்‌ஷன் 500 எக்ஸ்ட்ரா (Vicks Action 500 Extra) போன்றவையும் அடங்கும்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தத் தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

அவற்றை விசாரித்த நீதிபதிகள், மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது ஒரு துணைக்குழுவை அமைத்து 349 மருந்துகளுக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, ஆய்வு மேற்கொண்ட துணைக்குழு, அவற்றில் 343 மருந்துகளை தடை செய்ய தற்போது பரிந்துரைத்துள்ளது. இதில் பல்வேறு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பல பிரபல மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த தடை குறித்து அகில இந்திய மருந்து நடவடிக்கை குழு அமைப்பின் இணை அமைப்பாளர் எஸ்.ஸ்ரீனிவாசன், “சட்ட விதிகளின்படி மத்திய அரசின் அனுமதி பெற்ற மருந்துகளை மட்டுமே மாநிலங்களில் தயாரிக்க முடியும்.

ஆனால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல், மாநில அரசுகளின் அனுமதி பெற்று தவறான மருந்துகளை உற்பத்தி செய்தனர். இந்த மருந்துகளில் ஒருவகையான கலவை உள்ளது. இதில் பெரும்பாலான மருந்துகள் உடலுக்கு தீமை விளைவிக்கும். பெரும்பாலான நாடுகள் இந்த வகையான மருந்துகளை தயாரிக்க அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தியாவில் இந்த வகையான 6200 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

2012-ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த நடவடிக்கையில் அதன் பாதுகாப்பு அறிக்கை கேட்கப்பட்டது. அதில், எப்டிசி மருந்துகளை நான்கு நிலைகளாகப் பிரித்த மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, முதல்நிலையில் 344 மருந்துகளை தடை செய்தது.

இந்த 344 மருந்துகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு விதமான கலவை (Fixed Dose Combination) இருக்கிறது . இந்த வகையான 25000 மருந்துகள் ரூ 1.10 லட்சம் கோடிக்கு இந்த சந்தைகளை ஆக்கிரமித்துள்ளன.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆதலால் இந்தக் கலவையை சேர்த்து தயாரிக்கும் மருந்துகளை பெரும்பாலான சர்வதேச நாடுகள் தடை செய்துள்ளன. இவற்றை முறைப்படுத்த வேண்டி ‘மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்’ மறுசீரமைக்கப்பட்டு 1988-இல் அமலுக்கு வந்தது.

ஆனால், அதன் பின்னரும், மத்திய அரசின் அனுமதி பெறாமல், நேரடியாக மாநில அரசுகளின் அனுமதியை பெற்றூ இந்த கலவையைச் சேர்த்து மருந்துகளை தயாரித்து வருகின்றனர். இந்தியாவின் மொத்த மருந்துகளில் பெரும்பாலானவற்றை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களே தயாரிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here