சாமானியர்கள் மீது ஏவப்பட்ட துல்லியத் தாக்குதல்

0
119

(நவம்பர் 13,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்பு பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கறுப்புப் பணப் புழக்கம், கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் இதனால் இரண்டு நாட்களுக்கு ஏடிஎம் இயங்காது என்றும் ஒரு நாளைக்கு வங்கி இயங்காது என்றும் தெரிவித்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நிலையிலும் மக்கள் வங்கிகளில் நீண்ட நெடிய வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர். ஏடிஎம் மையங்களுக்குச் சென்று தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் மறுபடியும் வங்கிகளுக்கே சென்றுள்ளனர். ஏடிஎம் மையங்கள் இன்றளவிலும் முழுமையாக இயங்காத நிலை. இது பற்றி மக்கள் பலர் கூறியதை இப்போது டாட் காம் பதிவு செய்கிறது.
irulaayi
1. இருளாயி
பணம் இல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கு. கையில இருக்க பணத்த மாத்த தான் இன்னைக்கு வந்தேன்; இதனால இன்னைக்கு வேலைக்குப் போகமுடியல. ஏற்கனவே நிறைய பணக் கஷ்டம். இதுல பணம் எடுக்க வந்து ஒருநாள் வீணாகிருச்சு.
abdul-majid
2.அப்துல் மஜீத்
இது நல்ல மாற்றமாக இருந்தாலும் இதனால் மக்கள் சிரமப்படாத அளவிற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். போதுமான அளவு சில்லறைப் புழக்கம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். நடமாடும் ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் செயல்பட்டால் சிரமத்தைக் கூடுமான அளவு தவிர்க்கலாம்.
ramraj
3.ராமராஜ்
மாற்றம் எல்லா காலகட்டத்திலும் வரும் ஒன்று; ஆனால் அது எப்படி நிகழ்கிறது என்பது முக்கியம். மக்கள் போதுமான பணமின்றி அவதிப்படுகின்றனர். பணம் எடுக்க வேண்டி வங்கிக்கு வருவதனால் அன்றைய நாள் விடுமுறை எடுக்க நேரிடுகிறது. நேர விரையத்தைத் தடுக்கும் வகையில் ஏடிஎம்கள் அனைத்தும் இயங்கி இருந்தால் மக்கள் இயல்புநிலைக்குச் சென்றிருக்கலாம்.
dhanalaxmi
4.தனலட்சுமி
மிகவும் இக்கட்டான நிலை; கைக்குழந்தைக்குச் சாப்பிட பால்கூட வாங்க முடியாத சூழல். 500 ரூபாய் நோட்டுகளை யாருமே பெற முன்வருவதில்லை. வங்கிகளில் சில்லறை பெற வேண்டி வந்தால் அன்றைய நாள் முழுக்க விரயமாகிறது.
gnanavel
5.ஞானவேல்
ஏடிஎம் செயல்படாமல் இத்தனை நாட்களாக காலம் தாழ்த்துவது அரசின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. வேலையாட்களுக்குச் சம்பளம் தர முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பழைய ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்காத நிலையில் இதைச் சம்பளமாக எப்படி வேலையாட்களுக்குத் தருவது? அப்படி அவர்கள் பெற்றுக் கொண்டாலும் அதனைக் கொண்டு எதுவும் வாங்க முடியாமல் மறுநாள் வங்கிகளையே நாடிச் சென்று மாற்ற வேண்டும்.
rahmathulla
6. ரகுமத்துல்லா
இது முற்றிலும் மத்திய அரசின் திறமையற்ற நிர்வாகத்திறனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு. இதுபோன்ற ஒரு முடிவு என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று. இதனைச் சரியாக திட்டமிடாமல் அவசரகால அறிவிப்பாக ஆக்கியதன் விளைவுதான் இந்தக் கஷ்டங்களுக்குக் காரணம்.
chandran
7.சந்திரன்
ஏடிஎம் பல இடங்களில் செயல்படவில்லை. பணம் எடுக்க பயன்படாவிட்டாலும் பணத்தைச் செலுத்துவதற்காது எளிதாக இருக்கும். ஆனால் நகரில் பல ஏடிஎம்கள் மூடப்பட்ட நிலையில்தான் உள்ளது. இதனால் சிறு தொகை செலுத்த வேண்டினாலும் வங்கிகளில் பல மணி நேரம் காத்திருந்து செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இதன் விளைவாக வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில்லறையின்றி பல இடங்களில் வியாபாரிகளே மக்களுக்குப் பொருள் தர மறுத்து விடுகின்றனர்.
alexandaer
8. அலெக்சாண்டர்
இது தேவையற்ற வீண் செலவு. நாட்டில் எத்தனை அவசர பிரச்சனைகள் உள்ளன. அவற்றையே சரி செய்து தீர்வு காணாத நிலையில் இது புது பிரச்சனையாகவே தோன்றுகிறது. மக்களை மிகவும் சிரமப்பட செய்கின்றது, நேர விரயம் செய்து பணத்தை எடுக்கவும், கணக்கில் செலுத்தவும் மக்கள் வங்கிகளில் காத்துக் கிடக்கின்றனர். இது மட்டுமின்றி இதனால் வங்கி ஊழியர்களும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்