சாதி, மத வெறுப்பு பேச்சால் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – உச்சநீதிமன்றம்

0
88

ஜாதி, மதங்களை முன் வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வெறுப்புப் பேச்சுகளை கொண்டு பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது 

இதையடுத்து, தேர்தல் ஆணையம் தெரிவித்த ஒப்புதலுக்கு 24 மணிநேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் மத, சாதி உணர்வுகளைத் தூண்டிவிடுவதுபோல் பிரச்சாரத்தில் பேசியதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதுவரை தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டதாக 3 பேருக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதுதொடர்பாக, வெளிநாடுவாழ் இந்தியரான ஹர்பிரீத் மன்சுகானி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள், அரசியல்வாதிகள் சாதி, மதரீதியாக மக்களிடத்தில் வெறுப்புணர்வையும், பிளவுபடுத்தும் வகையில் பேசுவதும் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும், கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராகவும் ஊடகங்களில் பேசினாலும், சமூக ஊடங்களில் கருத்துகள் தெரிவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அரசியல்வாதிகளின் பேச்சுகளைக் கண்காணிக்க அரசமைப்புச் சட்டரீதியாக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமையில் ஒருகுழு அமைத்து, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். தேசிய அரசியலில் உள்ள வகுப்புவாதமும், சாதி அடிப்படையிலான கட்சிகளும் இந்திய அரசமைப்பின் தனித்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் விளைவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவும், வழக்கறிஞர் அரூப் பானர்ஜியும் ஆஜராகினர். தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் அமித் சர்மா ஆஜராகி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரிடம், இதுவரை வெறுப்புணர்வுடன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக 3  பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள் என்று அறிகிறோம். அதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி என்று அறிந்தோம் என்றார்.

அதற்கு வழக்கறிஞர் அமித் சர்மா, மதத்தின் பெயரால் மாயாவதி வாக்கு கேட்டதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதில் அனுப்பக் கோரியிருந்தோம் என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மாயாவதி 12-ஆம் தேதிக்குள் பதில் அளித்தாரா? இன்று 15-ஆம் தேதி ஆகிறது. அவர் இன்னும் உங்களுக்குப் பதில் அளிக்கவில்லை. இதுபோன்ற வழக்குகளில் சட்டம் உங்களை என்ன செய்ய அனுமதிக்கிறது. பதில் கூறுங்கள். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள். உங்களுக்கு என்ன அதிகாரம் தரப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், “மாயாவதிக்கு நாங்கள் ஆலோசனை கூறுவோம் அல்லது புகார் பதிவு செய்வோம். அவர்கள் பதிலளிக்க கால அவகாசம் அளிப்போம்” என்றார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பேசுகையில், அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒரு பல் இல்லாத அமைப்பு, மதரீதியாக, சாதிரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை என்று கூறுகிறீர்கள். அதிகபட்சமாக உங்களால் அவ்வாறு பேசியவர்களுக்கு எதிராக நோட்டீஸ் மட்டும் அனுப்ப முடியும். ஒருவேளை வேட்பாளர் பதில் அளித்தால் அவருக்கு நீங்கள் ஆலோசனை கூறுவீர்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் நீங்கள் வேட்பாளருக்கு எதிராக கிரிமினல் புகார் பதிவு செய்ய முடியும் தானே. அந்த அதிகாரம் சட்டப்படி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுதானே எனக் கேட்டார்.

அதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,தேர்தல் ஆணையத்துக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை. வெறுப்புணர்வோடு பேசும் வேட்பாளரை தகுதி நீக்கம் கூட செய்ய முடியாது. இதுதான் எங்களின் அதிகாரம். தேர்தல் ஆணையம் வெறுப்புணர்வு பேச்சுக்கு எதிராகவும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களுக்கு எதிராகவும் சில வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கிறோம் என்றார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், வழிகாட்டு நெறிமுறைகள் என்றால் என்ன? நீங்கள் கடமையைச் செய்ய கட்டுப்பட்டவர்கள். இதுபோன்ற விஷயங்களில் நேரம் மிகவும் குறைவாகத் தரப்பட்டுள்ளது. நீங்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் விளைவுகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம். நீங்கள் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்தும், வெறுப்புணர்வோடு பேசும் வேட்பாளர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை ஆகியவை குறித்து செவ்வாய்க்கிழமை  தேர்தல் அதிகாரி தனிப்பட்ட முறையில் எங்கள் முன் ஆஜராகி விளக்க வேண்டும் என உத்தரவிட்டார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here