கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை 2050ல் ஒழிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்த கருத்து, விவாதப்பொருளாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் தேர்வானவர்களின் சாதி ரீதியிலான புள்ளிவிவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில், ‘கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050க்குள்ளாவது சாதி ஒழியும். சான்றிதழில் சாதிப்பெயரை நீக்கினால் தமிழக மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஒரே குடையின் கீழ் நிற்பர். தகவலை வெளியிட்டால் சாதி பிரச்சனை வரும் என டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அச்சப்படுவது மாயை, கற்பனையானது. அந்த அச்சம் உண்மை என்றால் டி.என்.பி.எஸ்.சி.யும், தமிழக அரசும் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்’ என்று நீதிபதி வைத்தியநாதன் கூறியிருந்தார்.

நீதிபதி வைத்தியநாதன் வெளியிட்ட இந்த கருத்திற்கு செயல்வடிவம் கொடுக்கமுடியுமா என இடஒதுக்கீடு தொடர்பாக பொது தளத்தில் இயங்கும் செயல்பாட்டாளர்களிடம் பேசினோம்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மற்றும் இடஒதுக்கீடு குறித்த புத்தகங்களை எழுதியுள்ள கோ.கருணாநிதியிடம் பேசியபோது, “நடைமுறை வாழ்வில் சாதி கடைப்பிடிக்கப்படும் வரை இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” என்கிறார்.

”நீதிபதி வைத்யநாதனின் கருத்தை ஊடகங்களில் படித்தேன். வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது. இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்பது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் இடஒதுக்கீடு இருப்பதால்தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேறி வருகிறார்கள். நடைமுறை வாழ்வில் சாதி ஏற்றத்தாழ்வு நீடித்தால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் என்பதற்கு பதிலாகத்தான் இடஒதுக்கீடு முறையை சட்டப்படி கொண்டுவந்தார்கள். நீதிபதி வைத்யநாதனின் கருத்து அரசிலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை, அவரது தீர்ப்பை பின்பற்றவேண்டுமெனில் சட்டத்தை மாற்றவேண்டும். அது சரியா?,” என்ற கேள்வியை முன்வைத்தார் கருணாநிதி.

நீட் கட்டாய நுழைவு தேர்வில் இடஒதுக்கீடு கொண்டுவரவில்லை எனில் பல்லாயிர கணக்கில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க வாய்ப்பில்லாமல் போகும் என சுட்டிக்காட்டுகிறார் கருணாநிதி

”சாதியற்ற சமூகத்தை உருவாக்க விரும்பினால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சான்றிதழ்களில் சாதி குறிப்பிடப்படுவதை நிறுத்தவேண்டும் என்கிறார் நீதிபதி வைத்தியநாதன். உண்மையில், சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பட்டதாரிகளுக்கு அவர்களுக்கான உரிமை மற்றும் சலுகைகள் அளிக்கப்படவேண்டும் என்பதற்காகதான் சான்றிதழ்களில் சாதி குறிப்பிடப்படுகிறது என்பதை நீதிபதி உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிப்பதை நிறுத்திவிடலாம் என கூறுவதற்கு ஒப்பாக இவரது கருத்து இருப்பதாக தோன்றுகிறது,” என்கிறார் கருணாநிதி.

நீதிமன்றம்

மேலும் அவர், ”தீண்டாமை ஒரு குற்றம் என அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 17 கூறுகிறது. இதை பெரியார் தீண்டாமையோடு சாதியை பின்பற்றுவதும் குற்றம் என மாற்றியமைக்கவேண்டும் என்றார். இந்த திருத்தத்திற்கு சாதி அமைப்பில் மேலடுக்கில் உள்ள முன்னேறிய சாதியினர்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற இடஒதுக்கீடு அவசியம்,” என்கிறார் கருணாநிதி.

சமூக சமத்துவத்தை எட்டிவிட்டோமா?

நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்த கருத்து கல்வி நிலையங்களில் செயல்படுத்தமுடியுமா என கல்வியலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்.

”நீதிபதி வைத்தியநாதன் சட்டக் கல்லூரி மாணவராக இருந்தவர் என்பதால் கட்டாயமாக அரசியலமைப்பு சட்டம் உருவான விதம் குறித்து நன்கு அறிந்திருப்பார். அதன்படி, 1949ல் நவம்பர் 25ம் தேதி சமூக நீதி குறித்து சட்டமேதை அம்பேத்கர் அளித்த விளக்கத்தை அவர் அறிந்திருப்பார்.

சாதி பேதமின்றி ‘ஒரு குடிமகன் – ஒரு ஓட்டு’ என்பதை ஏற்றுக்கொண்டதால் அரசியல் சமத்துவத்தை எல்லா குடிமக்களும் பெறுகிறார்கள். அதேபோல, சாதிபேதமின்றி, உயர்வு தாழ்வின்றி, சமூக சமத்துவத்தை ஏற்படுத்தவேண்டும் என்றார். அதற்கு தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உயரவேண்டும், அவர்களின் சாதி அடையாளம் கொண்டு அவர்கள் நசுக்கப்படக்கூடாது என்பதற்காக சமூக சமத்துவத்தை ஏற்படுத்த இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. சமுக சமத்துவத்தை அடைந்துவிட்டோம் என்ற நாளில்தான் இடஒதுக்கீடு ஒழிப்பு பற்றி யோசிக்கமுடியும்,”என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

”வேறு சாதியை சேர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டதாக சொந்த மகளை தண்டிக்கும் நிலை இன்றும் நீடிக்கிறது, சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக தாழ்த்தப்பட்ட நபரின் சடலத்தை புதைக்க முடியாத நிலை நீடிக்கிறது. சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிக்கப்படும் சமூகத்தில் அரசியலமைப்பு கொடுத்துள்ள முக்கியமான வாய்ப்பு இட ஒதுக்கீடு. அதனை ஒழிக்க சொல்வதற்கு பதிலாக, சாதி பார்க்காமல், ஏற்றதாழ்வு இல்லாமல் திருமணம் செய்யும் பெண்ணை அவரது பெற்றோர் தடுக்கக்கூடாது, அவர்கள் தடுப்பது குற்றமாக கருதி அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என நீதிபதி கூறியிருக்கலாம்,”என்கிறார்.

1949ல் அம்பேத்கர் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டிய அவர்,”அரசியல் ரீதியான சமத்துவத்தை எட்டிவிட்டாலும், சமூக சமத்துவத்தை எட்டாமல் போனால் இந்தியா குடியரசு நாடக அறிவித்துக்கொண்டாலும், பெரிய முரண்பாடுகளைசந்திக்க நேரிடும் என அம்பேத்கார் உணர்த்தினார். அந்த சமூக சமத்துவத்தை நாம் அடைந்துவிட்டோமா என சிந்தித்துப்பார்த்துவிட்டு நீதிபதி தனது எண்ணத்தை வெளிப்படுத்தலாம்,” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

”நீதிபதிகள் சொந்த கருத்தை சொல்லக்கூடாது”

நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும்போது அவர்களது சொந்த கருத்தை சொல்லக்கூடாது என ஏற்கனவே பலமுறை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது என்ற வாதத்தை வைக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.

”நீதிபதி வைத்தியநாதன் முன்னர் ஆவண மோசடி வழக்கு ஒன்றில் தனது சொந்த கருத்தை சொன்னதற்காக, எதிர்ப்புகளை சந்தித்தார்.

அந்த மோசடி வழக்கில் அபராதம் மட்டும் விதித்துள்ளதாகவும், தனக்கு அதிகாரம் இருந்தால், மோசடி செய்தவர் விரலை வெட்டிவிடுவேன் என்றார்.

அவரது கருத்தை உச்சநீதிமன்றம் விமர்சித்தது. அதனைத்தொடர்ந்து சொந்த கருத்தை தீர்ப்பில் இருந்து நீக்கினார். இந்த முறையும் தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் விசாரித்த வழக்கு தேர்வாணையம் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிப்பது தொடர்பானது. அதில் பதில் தருவது குறித்து பேசவேண்டும். ஆனால் 2050ல் இடஒதுக்கீடு ஒழித்து எல்லா மக்களும் ஒரே கூரையின்கீழ் கொண்டுவர அரசு முயலவேண்டும் என்கிறார். இது ஆட்சேபிக்கத்தக்க பத்தியாகிவிட்டது,”என்கிறார் சந்துரு.

இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக 2019ல் முடிவெடுத்த நாடாளுமன்றம் 2029வரை இடஒதுக்கீடு நீடிக்கும் என தெரிவித்துவிட்டது என கூறிய சந்துரு, ”இடஒதுக்கீடு நாடாளுமன்றம் முடிவு செய்யவேண்டிய விவகாரம் என்பதால், நீதிபதிக்கு அது குறித்து சொந்த கருத்து சொல்வதற்கு இடமில்லை.

பொது பணிகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் கிடைக்கும்வரும் இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்பதுதான் அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு முரணாக 2050ல் ஒழிக்கப்படவேண்டும் என நீதிபதி அவராகவே ஒரு ஆண்டை குறிப்பிடுவது தேவையற்றது. நீதிபதிகள் சொந்த கருத்தை சொல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் உணர்த்தியுள்ளபோதும், அது நடைமுறையில் பின்பற்றப்படவில்லை என்பது புலனாகிறது,”என்கிறார் சந்துரு.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here