விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, 72 வருட டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். இதை விராட் கோலி “எனது வாழ்க்கையில் ஒரு வரலாற்று தருணம். இவ்வளவு திறமையான வீரர்களை வழிநடத்துவதற்கு பெருமை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

“இந்தக் கலாச்சாரத்தை அணிக்குள் கொண்டு வர நாங்கள் ஒரு வருடமாக கடினமாக உழைத்து வந்தோம். இதற்கான செயல்கள் நான் முதல்முறை இதே மண்ணில் கேப்டன் ஆகியதிலிருந்து துவங்கியது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் நான் பெருமையாக உணர்கிறேன். இந்த வீரர்கள் கேப்டனை பெருமையாக உணர வைக்கிறார்கள். நிச்சயமாக இந்த வெற்றிக்கு இந்த அணி முழு தகுதி கொண்டது” என்று பரிசளிப்பு நிகழ்ச்சியில் சொன்னார் கோலி.

30 வயதான இந்திய கேப்டன் கோலி இந்தத் தொடரில் ஒரு சதம் உட்பட 282 ரன்களை குவித்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ”இந்த வெற்றிகரமான அணியில் ஒருவனாக இருப்பது பெருமிதம் கொள்ள வைக்கிறது. இப்போதும், எப்போதும் இது வெறும் அணி அல்ல, குடும்பம்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும் போது, இது எனக்கு மிகவும் திருப்திகரமான வெற்றி. உலகக் கோப்பை 1983, உலக சாம்பியன்ஷிப் 1985 வெற்றிகளை விடவும் இது மேலானது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் தான் கிரிக்கெட்டின் உண்மையான வகைமையாகும். டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே கடினமான விளையாட்டாகும். கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் ஆர்வத்துடன் உணர்கிறார். ஆடுகளத்தில் ஆர்வத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான காதலையும் வெளிப்படுத்துவதில் கோலிக்கு நிகராக வேறு எந்த கேப்டனையும் சொல்லமுடியாது. இந்த அணி எவ்வளவு கடினமாகப் பயிற்சிகளை மேற்கொள்கிறது என்று எனக்குத் தெரியும் எனக் கூறினார்.

இந்தியா அடிலெய்டு மற்றும் மெல்பெர்ன் டெஸ்ட்களையும், ஆஸ்திரேலியா பெர்த் டெஸ்ட்டையும் வென்றது. இன்று(திங்கள்கிழமை) நடைபெற்ற சிட்னி டெஸ்ட் மழையால் ட்ரா ஆனது. இதனால் இந்தியா இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here