பேக்கிங் செய்ய விரும்புவர்களுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபி. சாக்லேட் பிரியர்கள் இதைப் பார்த்தால் சாப்பிட்டு விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மிக சுவை கொண்டது. கிறிஸ்துமஸ் அன்றேகூட பண்ணலாம். இதன் கலவையை முன்னரே செய்து ப்ரீசரில் வைத்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுத்து வைத்தால் போதும். சாப்பாடு பரிமாறும் சமயத்தில் சாக்லேட் கலவையை ஓவனில் வைக்கலாம்; சாப்பிட்டு முடியும் தருவாயில் கேக் ரெடி ஆகிவிடும். இளம் சூட்டுடன் பரிமாறினால், விரும்பி உண்பார்கள். செய்வது எளிது; விழாக் காலங்களில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த கேக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம். கண்டிப்பாக செய்து கொடுத்து எல்லோரையும் ஆச்சரியபடுத்தவும் .

தேவையான பொருட்கள் :

டார்க் சாக்லேட் – 50கிராம்

மைதா -20 கிராம்

முட்டை -2முழுதாக +1மஞ்சள் கரு

உப்பு -ஒரு சிட்டிகை

கோகோ பவுடர் -10 கிராம்

வெண்ணெய் -80 கிராம்

பொடித்த சர்க்கரை -90 கிராம்

வெணிலா எஸ்ஸன்ஸ் -1/2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். தண்ணீர் மேல் படாமல் ஒரு பாத்திரம் வைத்து அதனுள் சாக்லேட் போட்டு உருக விடவும். உருகியதும் அதனோடு வெண்ணெய் போட்டு உருகியதும் ஆறுவதற்கு தனியே எடுத்து வைக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் முட்டை, வெணிலா எசன்ஸ், பொடித்த சர்க்கரை போட்டு 10 நிமிடங்களுக்கு எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும். அதன் பின் ஆறிய சாக்லேட் கலவையை ஊற்றி மிகக் குறைந்த வேகத்தில் அடிக்கவும். பின்பு மைதா, கோகோ, உப்பு சேர்த்து மரக் கரண்டி கொண்டு நன்கு கலக்கவும். பேக் செய்வதற்கு உகந்த நான்கு கிண்ணம் எடுத்துக்கொண்டு அதில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். அதன் மேல் நன்கு படுமாறு கோகோ பவுடர் கொண்டு தூவவும். அதற்குப் பிறகு கிண்ணத்தில் ரெடி செய்து வைத்த கலவையை ஊற்றி ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 20 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்து சூடாக பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here