சஞ்சாரம் – கரிசல் நிலத்தின் ஆன்மா.
லஷ்மி சரவணக்குமார்.

( நாவல் வெளியானபோது உயிர்மையில் எழுதின பதிவு.)

கதையைச் செய்தவன் அதைச் சொல்லிப் பார்க்கத்தான் ஆசைப்படுகிறான். உரிமை கொண்டாட அல்ல.
சஞ்சாரம் – பக்கம் 263

நமக்குக் கற்றுத்தரப்பட்ட எல்லாமும் கதைகளை உள்ளடக்கியே கற்றுத்தரப்பட்டிருக்கின்றன. கதை சொல்லுதலும் கேட்டலும் அறிவு என்பதைத் தாண்டி வாழ்வின் மகத்தான அனுபவங்களில் ஒன்றாய் இருக்கிறது. எழுத்து வடித்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாகவே நம் கதைகளுக்கு ஏராளமான வடிவங்கள் இருந்திருக்கின்றன. இசையின் வாயிலாகவும் நாடகத்தின் வாயிலாகவும் சொலவடைகளாகவும் வாழ்க்கையோடே பிணைந்து கிடக்கிறது கதை சொல்லல். எல்லோராலும் கதை சொல்ல முடியும். எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றன எனபது நமக்குக் கிடைத்திருக்கும் ஆகப்பெரிய வரம். நாம் நமக்கு நடந்த எல்லாவற்றையுமே கூட கதைகளாகவே சொல்லிப் பழக்கப்பட்டிருக்கிறோம். கதை சொல்லிகள் பலரும் தான் சொல்லிய கதைகளை பிறிதொருவர் சொல்லி கேட்க பிரியப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள். கரிசல் நிலத்தின் புனைவுகள் முழுக்க இப்படியாக ஏராளமான மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை தங்களின் முன்னோர்களின் வாழ்க்கையை கதையாகச் சொன்னதன் பிரதிபலிப்பே.

கரிசல் நிலம் பற்றி நம் ஒவ்வொருவரின் நினைவுகளுக்குள்ளும் கலந்திருப்பது அந்நிலத்தின் கதைகளின் வழியாய் நாம் கேட்டும் வாசித்து அறிந்தவைகள்தான். தமிழ்ப் புனைவுலகிற்கு நீண்ட மரபைத் தந்திருக்கும் இப்போதும் தந்துகொண்டிருக்கும் அந்நிலத்திற்கு இலக்கியத்தோடு சேர்த்து இசைக்குமான மரபும் வரலாறும் இருக்கவே செய்கிறது. பெரும்பாலும் சம்சாரிகளின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கரிசல் நிலப் புனைவுகளிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்டு தனித்து நிற்கிறது எஸ்.ராவின் சமீபத்திய நாவலான சஞ்சாரம். இசை வழியாய் கதை சொல்லப்பட்ட வரலாறு நமக்கு ஏராளமாய் உண்டு. ஆனால் கதைகளின் வழியாய் இசைக்கலைஞர்களைப் பதிவு செய்திருப்பது வெகு அபூர்வம். அப்படியே எழுதப்பட்டப் பதிவுகளும் மேல்த்தட்டு வர்க்கத்தினருக்கான இசையை முன்னிறுத்துவதாகவே இத்தனை காலமும் இருந்து வந்திருக்கின்றன. கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் அவ்வகையில் எழுதப்பட்ட மிக முக்கியமான நாவல். அந்தக் காலகட்டத்தின் இசை மற்றும் நாடக நடிகர்களைப் பற்றின ஆழமான பதிவான அந்த நாவல் திரைப்படமாக்கப்பட்ட போதும் சிறப்பானதாகவே இருந்தது. அதன் பிறகு இசைக்கலைஞர்களைப் பற்றின பதிவுகள் நம்மிடம் அபூர்வமே.

நாதஸ்வரம் என்பதாகவும் நாயனம் என்பதாகவும் பொதுவாக சொல்லப்படும் ஒரே இசைக்கருவி உண்மையில் இரண்டு விதமான சமூகக் கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறது. உதாரணமாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் காட்சியையே கூறலாம். சிவாஜி கணேசன் வாசிக்கும் போது அதை நாதஸ்வரமாகவும் மனோரமா வாசிக்கும் போது நாயனமாகவும் சொல்வார்கள். சாஸ்த்ரிய சங்கீதத்தை ரசிக்கும் எல்லோருக்கும் அது நாதஸ்வரம். கிராமிய சங்கீதத்தைப் பொறுத்தவரை நாயனம். இதனாலேயே நாதஸ்வரம் தமிழர்களின் எல்லா நிகழ்வுகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாதஸ்வரம் கோவில்கள், துஷ்டி வீடுகள் என எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் பொதுவான ஒரு இசைக்கருவியாய் இருக்கிறது. நாதஸ்வர இசையை விரும்பாதவர்களைப் பார்ப்பது அரிதே. காற்றுக் கருவிகளின் மீது பொதுவாகவே மனிதர்களுக்கு அலாதியான ப்ரியம் இருக்கிறது. ராஜஸ்தானத்து மேய்ப்பர்கள் தங்கள் கைகளில் நீண்ட கழி வைத்திருப்பார்கள். சிறு சிறு துளைகளிருக்கும் அந்தக் கழிகளை காற்றில் சுழற்றி ஆட்டும் போது அற்புதமான ஒலிகளைக் கேட்க முடியும். மேய்ச்சலின் போது ஆட்டிற்கு தங்களின் இருப்பை உணர்த்துவதற்காகவும் தங்களின் பொழுது போக்காகவும் இதை செய்கிறார்கள். நாதஸ்வரம் இசையைக் கேட்பது அதன் சங்கீத நுட்பங்களைக் கடந்து நம் எல்லோருக்கும் அந்தரங்கமான ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது.

பக்கிரி, ரத்தினம் என்ற இரண்டு இசைக்கலைஞர்களின் வழி துவங்கும் சஞ்சாரம் அவர்களின் நினைவுகளில் இருந்து கடந்த நூற்றாண்டின் மகத்தான இசைக்கலைஞர்கள் சிலரின் வாழ்வையும் பேசுகிறது. ஆனால் எந்த இடத்திலும் தனிப்பட்ட முறையில் இசைக்கலைஞர்களைப் பற்றின வாழ்க்கைப் பதிவாக மட்டுமே சுருங்கிவிடாமல் கரிசல் நிலத்தின் கலாச்சாரத்தோடு எத்தனை பிணைந்திருக்கிறார்கள் என்பதையும் வாழ்க்கை விட்டுச் செல்லும் புதிர்கள் அவ்வளவையும் கரிசல் நிலத்து மனிதர்கள் கதைகளை மாற்றிச் சொல்லிக்கொண்டிருப்பதையும் நமக்குத் தருகிறது. பூமணியின் வெக்கையில் நாவலின் துவக்கத்தில் ஒரு குற்றம் நிகழ பின்பு அதைத் தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் செய்யும் அப்பாவும் மகனும் தலைமறைவாகிறார்கள். அந்தக் குற்றம் நிகழ்ந்ததற்கான காரணத்தை முன்பின்னான கதைகளாய் சொல்லிவிட்டு இறுதியில் அவர்கள் காவல்துறையில் சரணடைவதோடு அந்த நாவல் முடிகிறது. இரண்டு சமூகத்தினருக்கு நடுவில் இருக்கும் பிரச்சனையாகவும், அண்ணனைப் பறி கொடுத்துவிட்ட ஒரு இளைஞனின் கோவமாகவும் அந்த நாவல் தனக்குள் மிக எளிய கட்டமைப்பைக் கொண்டிருக்கும். ஆனாலும் கரிசல் நிலத்தின் ரத்தமும் சதையுமான வாழ்வை நெருக்கமாக பதிவு செய்ததன் மூலம் வெக்கை இன்றளவிற்கும் தவிர்க்க முடியாத நாவலாக இருக்கிறது. சஞ்சாரம் சற்றேறக்குறைய இதே மாதிரியான துவக்கத்தையும் முடிவையும் கொண்டிருந்தாலும் நாவலின் துவக்கத்திலேயே மிகத் தெளிவாக அந்த சம்பவம் நிகழ்வதற்கான காரணங்களை எஸ்.ரா நமக்குச் சொல்லிவிடுகிறார். மேலும் இது ஒரு குடும்பத்தின் பகையாகவோ, இரண்டு சமூகத்தினருக்கு நடுவிலிருக்கும் வன்மமாகவோ இல்லாமல் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த கலைஞர்களின் வாழ்வை பேசுவதன் மூலம் வாசகனுக்கு பரந்த வாசிப்பனுவத்தைத் தருகிறது.

வெறும் பாலியல் நோக்கிற்காக மட்டுமே ஆடப்படுவதாகப் பார்க்கப்படும் நையாண்டி மேள ஆட்டமும், பாட்டும் ஒரு காலத்தில் மகத்தான கலைகளாக பார்க்கப்பட்டவை. ஆனால் அதைச் சார்ந்த கலைஞர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இன்றளவிலும் அவர்களின் வாழ்க்கை நிலை சொல்லொண்ணாத் துயரங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கிறது. கிராமியக் கலைஞர்களை பெருநகரத்தின் சிறு அரங்கங்களுக்குள் காட்சிப் பொருட்களாக்கி என்.ஜி.ஓக்கள் காசுப் பார்த்துக் கொண்டிருப்பதையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன இந்தத் தலைமுறைக்கு ஒரு காலத்தில் அவர்கள் ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டார்கள் என்பது ஆச்சர்யமான செய்தியாக இருக்கலாம். ஒரு கோவில் திருவிழாவில் கச்சேரிக்காக வருகிறார்கள் ரத்தினம் ட்ரூப். திருவிழா நடத்தும் ஒரே சாதியின் இரண்டு பிரிவுகளுக்குள் சாமியை யார் தூக்குவதென சண்டை. அவர்கள் ஆகக் கடைசியாய் கலைஞர்களிடம் தங்கள் கோவத்தைக் காட்ட பதிலுக்கு பக்கிரியும் கொஞ்சம் கோவப்படுகிறான். அவர்கள் இருவரையும் கட்டி வைத்துவிடுகிறார்கள். இந்த இரண்டு கதாப்பாத்திரங்ள் மெளனமாக இருக்க அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் உரையாடுவதன் வழியாய் சாதி நம் சமூகத்தில் எத்தனை ஆழமாய் ஊறிப்போயிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுவர்களும் கூட இவர்களை மரியாதை இல்லாமல்தான் கூப்பிடுகிறார்கள். இன்னார் இந்த சாதி என்பதையும் அவர்களை இப்படித்தான் நடத்த வேண்டுமென்பதையும் எப்பொழுது யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களென்பது ஒருபோதும் விளங்க முடியாத புதிர்.

அங்கிருந்து தப்பிக்கும் போது பக்கிரி கோவத்தில் திருவிழாப் பந்தலுக்கு தீ வைத்துவிட்டு ஓடிவருகிறான். ஊரிலேயே இருந்தால் எப்படியும் போலீஸில் மாட்டிக் கொள்வோமென்கிற அச்சத்தில் அவனும் ரத்தினமும் கொடுமுடியிலிருக்கும் பக்கிரியின் அக்கா வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். இந்த பயணத்திலும் பயணத்திற்குப் பிறகு கொடுமுடியிலுமாக அவர்கள் இருவரின் நினைவுகளிலிருந்து வெவ்வேறான கதைகள் சொல்லப்படுகின்றன. கிபி1311 ல் அரட்டானத்திலிருந்த லட்சய்யாவிலிருந்து துவங்கும் இந்தக் கதை சமகால கலைஞர்கள் வரை மிக அழகாக வெவ்வேறு காலகட்டத்திலிருந்த கலைஞர்களைப் பற்றின கதைகளைத் தருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இசைக்கலைஞர்களுக்கான முக்கியத்துவங்கள் குறைந்து இன்று அவர்கள் பொருட்படுத்தக்கூடியவர்களாய் இல்லாமல் போனது வரையிலான நிலைவரை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு பிரதியின் வழி எப்போதும் கதைசொல்லி வாசகனுக்கு சில முடிச்சுகளை மட்டுமே தூக்கிப் போடுகிறான். தீர்மானமான எந்த முடிவுகளையும் கொண்டிருக்காத அந்தப் புனைவுவெளிக்குள் தனக்கு சாத்தியமான எல்லா சாகசங்களையும் ஒரு வாசகன் செய்து பார்த்துக் கொள்ள முடியும். இந்த நாவலின் முக்கியக் கதையும் உபகதைகளும் வாசகனிடத்தில் இப்படியான முடிச்சுகளையே தூக்கிப் போட்டுச் செல்கின்றன. லட்சய்யாவின் கதையை லயிக்கும் ஒருவன் அதைத் தொடர்ந்து சென்று மாலிக் கபூரின் அரச விதானங்களுக்குள் சூழ்ந்து கொண்ட லட்சய்யாவின் வினோத நாதஸ்வர ஒலிகளை தானும் உணர்கிறவனாய் இருக்கலாம். ”அவரா நெனச்சா மட்டுந்தான் அவர் வாசிக்கிறத நாம கேக்க முடியும், மத்தபடி பொண்ணும் பொருளும் எத வெச்சாலும் அவர வாசிக்க வைக்க முடியாது.” என சொல்லப்படுகிற சாமிநாதப்பிள்ளையின் கதையில் சாமிநாதப்பிள்ளையின் வரலாறு முழுக்க நமக்கு சொல்லப்படுவதில்லை. அதை ஒரு வாசகன் தேடிக் கண்டடையும் போது கிடைக்கும் அனுபவம் மகத்தானது. இந்த நாவல் முழுக்க வரும் கலைஞர்கள் அதிகாரத்தைத் தொந்தரவு செய்கிறவர்களாய் இருக்கிறார்கள் என்பது முக்கியம். மாலிக் கபூரின் வழி டெல்லி சாம்ராஜ்யத்தையே சுழற்றியடிக்கும் லட்சய்யாவை யமுனை ஆற்றங்கரையில் வைத்துக் கொலை செய்யும் செளகத் அலி அவரின் நாதஸ்வரத்தையும் ஒழித்துப் போடுகிறார். வட இந்தியாவில் எங்கும் நாதஸ்வரம் இசைக்கப்படாமல் போனதற்கு இதை ஒரு முக்கியமான காரணமாகக் கூறுகிறார்கள். கல்லையும் தட்டி எழுப்பும் லட்சய்யாவின் இசை நமக்கு ராகத்தின் மூலம் அக்னி ஏற்றும் தான்சேனை நினைவுபடுத்துகிறது. ஆனால் லட்சய்யா அதிகாரத்தோடு இணங்கிப் போகிறவராய் இல்லை.

“நாதஸ்வரம் என்பது கரிசலை பூக்க வைக்கும் ஒரு விசித்திர வாத்தியம் என்பதை கரிசல்வாசிகள் ஒவ்வொருவரும் உணர்ந்தேயிருந்தார்கள். அதனால்தான் கோவில் உள்ள ஊர்களில் எல்லாம் மேளமும் நாதஸ்வரமும் வாசிப்பவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.” நாதஸ்வர இசையையும் கரிசல் வாழ்க்கையையும் தனித்துப் பார்க்க முடியாதபடி எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாதஸ்வர இசை எல்லோரையும் வசீகரித்துவிடுவதாக இருக்கிறது. கோவில்களைப் புகைப்படங்கள் எடுக்க வருகிற வெள்ளைக்காரன் தற்செயலாக கேட்கும் இந்த இசையில் லயித்துப் போய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்த இசையைக் கற்றுக் கொள்ள வந்துவிடுகிறான். இசையோடு மொழியையும் கற்றுக்கொள்க்கிறான். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த இஸ்லாமியச் சிறுவன் கோவிலில் ஒலித்த நாதஸ்வர இசையில் லயித்துப் போய் அதைக் கற்றுக்கொள்ளப் போகிறான். கோவிலுக்குள் இஸ்லாமியர்கள் நுழைய முடியாதென்கிற கட்டுப்பாட்டைப் பொறுட்படுத்தாமல் இசைக்கலைஞர்களே அவனுக்குப் பட்டையடித்து விட்டு கூட்டிச் செல்கிறார்கள். நாதஸ்வர இசையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இப்படி இந்த நாவல் முழுக்க இந்த இசை எந்தப் பாகுபாடுமில்லாமல் எல்லோருக்குள்ளும் கலந்து போயிருப்பதை நாம் பார்க்க முடியும்.

‘நாம் ஏன் கிளாச்சிக்குகளை வாசிக்க வேண்டும்’ என்னும் கட்டுரையில் இடாலோ கால்வினோ சொல்வதை இங்கு உதாரணமாக குறிப்பிட விரும்புகிறேன். ”ஒரு கிளாசிக் என்பது தனது வாசகர்களுக்கு சொல்ல வேண்டியதனைத்தையும் என்றுமே சொல்லித் தீர்க்காதிருப்பது. நம்முடையதிற்கு முந்தியதான வாசிப்புகளின் தடயங்களைத் தாங்கியபடி வந்து சேர்கின்ற புத்தகங்கள்தான் கிளாசிக்குகள். இந்த துலக்கமூட்டலின் சமயத்தில் அவை கலாச்சாரத்தின் மீது விட்டிருக்கிற தடயங்களை அல்லது அவை கடந்து வந்திருக்கின்ற கலாச்சாரங்களின் தடயங்களை ( அல்லது மிக எளிமையாக மொழியின் மீதும் பழக்கவழக்கங்களின் மீது ) கொண்டு வருகின்றன. இது எல்லாமே புராதன மற்றும் நவீன கிளாசிக்குகளுக்கும் பொருந்தும்.” சஞ்சாரம் இதுமாதிரியா அனேக முடிச்சுகளைத்தான் நம் முன் தூக்கிப் போட்டிருக்கிறது. கி.ராவின் கதைகளில் சம்சாரிகளுக்கும் திருடர்களுக்குமான உறவைக் குறித்து நிறைய இடங்களில் நாம் பார்க்க முடியும். களவு கரிசல் நிலத்தின் நிழலைப் போல் எப்போதும் அந்த வாழ்க்கையை மெளனமாய்த் தொடர்ந்து செல்வதாக இருக்கிறது. ஒதியூருக்கு வந்து மாட்டிக் கொள்ளும் திருடன் வயிறார கஞ்சி குடித்தபின் ‘என் பிள்ளைக ஒருநாளும் இந்த மாதிரி கஞ்சி குடிச்சதில்ல.’ என தவதாயப்பட்டு ஊர்க்காரர்களுக்கு அவன் மீது இரக்கமே மிஞ்சுகிறது. இனிமே திருடக்கூடாதென மன்னித்து கொஞ்சம் தானியங்களையும் கொடுத்து அனுப்புகிறார்கள்.

”கரிசல் பூமிக்கென சில விசேஷ குணங்கள் இருக்கின்றன. மண்ணைப் போலத்தான் இங்கே மனிதர்களும், அவர்கள் வெயிலில் காய்ந்து கிடந்தாலும் ஈரமனது கொண்டவர்களே. கோபம் அவர்களின் இயல்பான குணம். ஆனால் எந்தக் கோபமும் மனதிற்குள் உறைந்து போவதில்லை. காற்றில் தூற்றப்படும் உமியைப் போல அது கண்முன்னே மறைந்து போய்விடுகிறது.” இந்த நாவல் முழுக்க இந்த வார்த்தைகளுக்கு உதாரணமாக அனேக இடங்களைப் பார்க்க முடிகிறது. நமக்கு நன்றாகத் தெரிந்த சில விசயங்களை அதுதான் தெரியுமே என்கிற அசட்டையினாலேயே பல சமயங்களில் நாம் பொருடுபடுத்தத் தவறிவிடுவதுண்டு. அப்படித்தான் கிராமிய இசைக்கலைஞர்களின் வாழ்வும், சம்சாரிகளின் வாழ்வும். எழுத்து மண்ணை விட்டு விலகி வந்து பத்து ஆண்டுகளாகிவிட்டது. இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுதப்பட்ட பெரும்பாலான புனைவுகள் மண்ணின் மீதான நினைவுகளையும் ஏக்கங்களையும் பதிவு செய்கின்றவையாக இருக்கின்றனவே ஒழிய அதன் ஆதாரமான வாழ்வை பதிவு செய்ய விளைந்திருக்கவில்லை. ஊரிலிருந்து விரட்டப்பட்ட முனிகளும் சாமியாடிகளும் பெருநகரத்து ஷாப்பிங் காம்பளக்ஸ்களில் செக்யூரிட்டிகளாகிவிட்ட நிலையில் சஞ்சாரம் அந்த நிலத்தை அதன் முழு வீர்யத்தோடும் பதிவு செய்திருக்கிறது. அவலங்களும், துயரங்களும் விடாது துரத்தியடித்தாலும் எந்த நிலையிலும் தன் கலையை விட்டு விலகாது இறுமாப்போடு ஒரு கலைஞன் தன் கனவுகளுக்குப் பின்னால் ஓடமுடியுமென்பதன் அழுத்தமான சாட்சியம் இது. கொண்டாட்டம், வழிபாடு, துக்கம் என எல்லாவற்றிலும் நம்மோடு கலந்து போன இசையையும் இசைக்கலைஞர்களையும் இன்னொருமுறை எதிர்கொள்ளப் போகும் நம் எல்லோருக்கும் அவர்களில் லட்சய்யாவையும், சாமிநாதப்பிள்ளையையும், பக்கிரியையும் சில கணங்களாவது நினைத்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

ஜெயலலிதா: மக்கள் முதல்வர்

“பொய்” ராதாகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here