அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி திருவிழா இன்று(திங்கள்கிழமை) சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

கந்தர் சஷ்டி விரதம் என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறுநாட்களுக்கு ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். அது மட்டுமல்ல,சிறப்பான பலன்களைத் தரும் ஒப்பற்ற விரதமும் கூட.

ஐப்பசி மாதம் கந்த சஷ்டி தினத்தில்தான் முருகப் பெருமான், தன் அவதாரத்துக்குக் காரணமான சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடந்தது. முருகப் பெருமானின் சூரசம்ஹாரம் தனிச் சிறப்பு கொண்டது. ஆம். முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அவனையே மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். 

அனைத்து சிவ ஆலயங்களிலும் இந்த ஆறு தினங்களும் முருகனுக்கு கந்தர் சஷ்டி உற்சவம் கொண்டாடப்பெறும். ஆறுபடை வீடுகளிலும் பிற முருகன் தலங்களிலும் இத்திருவிழா மேலும் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை மாதத்தில் வரும் “கந்த சஷ்டி” விசேஷமானது என்றாலும், வருடத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி தினமும் சிறப்பானது தான். அப்படிப்பட்ட சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற “சஷ்டி விரதம்” அனஷ்டிக்கும் முறையயையும், அதன் பலன்களைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.

விரதங்களில் வார விரதம், நாள் விரதம், பட்ச விரதம் என்று மூன்று வகை உண்டு. வியாழன், சனி போன்ற ஏதாவது ஒரு நாள் இருக்கும் விரதம் வார விரதம் எனப்படும். மாதத்தின் ஏதாவது ஒரு நாள் உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி தினத்தில் விரதம் இருப்பது நாள் விரதம். மாதத்தின் இரு நாள்கள் ஏதாவது ஒரு திதியில் உதாரணமாக சஷ்டி, பிரதோஷம் நாள்களில் இருப்பது பட்ச விரதம் எனப்படுகிறது. இதில் சஷ்டி விரதம் சிறப்பானது.

‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பைசிறப்பானதாக மாறும் என்பதுதான். இன்னொருவகையில் கூடச் சொல்லலாம். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் அவர்களின் அகமென்னும் கருப்பையில் கரு வரும். இப்படிச் சிறப்புமிக்க சஷ்டி விரதம் காலம் காலமாக நம்மிடம் இருந்து வருகிறது. ஐப்பசி மாதம் தீபாவளி கழிந்த பிரதமை நாளில் தொடங்கும் இந்த சஷ்டி விரதம் ஆறு நாள்கள் கடைப்பிடிக்கப்பட்டு சஷ்டி நாளில் முடியும். அதுவே கந்த சஷ்டி விரதம் எனப்படுகிறது.

சூரனை முருகப்பெருமான் வதைத்த நாளோடு இந்த விரதம் முடிகிறது. ஐப்பசி மாத சஷ்டியில் தொடங்கி ஒரு முழு ஆண்டில் வரும் 24 சஷ்டியிலும் விரதமிருப்பது நல்லது. முடியாதவர்கள் இந்த ஐப்பசி சஷ்டி விரதம் இருக்கலாம். ஆனால் ஆறு நாள்களுமே விரதம் இருப்பதுதான் முக்கியமானது. காலையில் எழுந்து தூய்மையாகி, திருநீறிட்டு, வடக்கிலோ, தெற்கிலோ அமர்ந்து முருகப்பெருமானை தியானிக்க வேண்டும். பின்னர் பூஜையறையில் முருகனை ஆராதித்து வழிபட வேண்டும். அப்போது நைவேத்தியமாக நெய்யில் செய்த மோதகம் வைப்பது விசேஷம். சஷ்டி விரத ஆறு நாள்களிலும் உண்ணாமல் இருப்பதுதான் நல்லது. எச்சில்கூட விழுங்காமல் இந்த விரதம் இருப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

முடியவே முடியாத பட்சத்தில் விரத நாளில் ஒரேயொரு முறை மட்டும் ஆறு மிளகும், ஆறு கை அளவும் நீரும் எடுத்துக்கொள்ளலாம். மிளகு வயிற்றில் அமிலக்கோளாறு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் அதை எடுத்துக்கொள்ளலாம்.

ஆறு நாளும் விரதமிருந்து ஏழாவது நாளில் சிறப்பான பூஜைகளை மேற்கொண்டு அடியார்களுக்கு உணவிட்டு ‘மகேஸ்வர பூஜை’ மேற்கொள்ள வேண்டும். ஆறு நாள்களும் உண்ணாமல், உறங்காமல் விரதமிருந்து ஏழாவது நாளில் கடலில் நீராடி விட்டே விரதம் கைவிடும் பக்தர்களைத் திருச்செந்தூரில் இன்றும் காணலாம். உடலையும் மனதையும் சீராக்கும் கந்தர் சஷ்டி விரதம் இன்று(திங்கள்கிழமை,28ஆம் தேதி) தொடங்கி நவம்பர் மாதம் 2ஆம் தேதி வரை வருகிறது. இந்த நாளில் முடிந்த வரை உண்ணா நோன்பிருந்து எல்லாம் வல்ல முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here