சஷி தரூர் அலுவலகம் மீது பாஜக ஆர்வலர்கள் தாக்குதல்

0
241

ஆளுங்கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ’ஹிந்து பாகிஸ்தான்’ உருவாகும் என்ற கருத்தை எதிர்த்து பாஜக இளைஞரணியைச் சேர்ந்த சிலர் திங்களன்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரின் தொகுதி அலுவலகத்தின் மீது கறுப்பு எண்ணெய் பூசினர்.

இச்சம்பவம் நடைபெற்றபோது சஷி தரூர் அலுவலகத்தில் இல்லை. நகரின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார்.
பாஜக யுவ மோர்ச்சா ஆர்வலர்கள், வாசகங்களை கத்தியபடி அலுவலகத்திற்குள் நுழைந்து ”ஹிந்து பாகிஸ்தான் அலுவலகம்” என்ற பேனரை மாட்டினர்.

தவறான கருத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் இது என திருவனந்தபுரம் மாவட்ட பாஜக தலைவர் எஸ். சுரேஷ் கூறினார்.
“இப்பகுதியின் மக்களவை உறுப்பினராக தரூர் இருப்பதால் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. எனவே, அவரது தவறான கருத்துக்கு எதிராக நடந்த இயற்கையான ஆர்ப்பாட்டமே தவிற வேறல்ல,” என்றார் சுரேஷ்.

மூத்த காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன், பாஜகவின் ஆணவத்தை எடுத்துக்காட்டும் சம்பவம் இது என ஊடகங்களிடம் கூறினார்.மாநில காங்கிரஸ் தலைவர் எம்.எம். ஹாசன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாளா ஆகியோரும் இச்செயலை கண்டித்தனர்.

சென்ற வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ”இந்திய ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை” என்ற தலைப்பில் பேசிய சஷி தரூர், “பெரிய ஆபத்து என்னவென்றால் அவர்கள் (பாஜக) மீண்டும் இதே பலத்துடன் மக்களவையில் வெற்றிபெற்றால், நமது ஜனநாயக அரசியலமைப்பு தழைக்காது, ஏனெனில் இந்திய அரசியலமைப்பை கிழித்துவிட்டு புதிய ஒன்றை எழுதுவதற்கு தேவையான மூன்று அம்சங்களும் அவர்களுக்கு இருக்கும்.“ஹிந்து ராஷ்டிரா என்ற கோட்பாட்டில் அது இருக்கும். சிறுபான்மையினருக்கான சமத்துவத்தை நீக்கி ஹிந்து பாகிஸ்தானை உருவாக்கும்,” என்றார்.

ஜூலை 14 ஆம் தேதி, தரூரின் கருத்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து சஷி தரூருக்கு கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்