ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு சலுகை விலையில் ஜியோ போனை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ‘தீபாவளி 2019’ என்ற புதிய சலுகை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, ரூ.1,500 மதிப்புள்ள 4ஜி ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இதன் மூலம்ரூ.800 சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்புக்கு எந்த ஒரு விதி முறைகளும் கிடையாது. குறிப்பாக பழைய போன்களை ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை கிடையாது’ என கூறப்பட்டுள்ளது.,

இது பற்றி
 கூறிய  முகே‌‌ஷ் அம்பானி, ‘இந்த விலை சந்தையில் உள்ள 2ஜி செல்போன்களை விட மிகக் குறைவு ஆகும். எனவே 2ஜி செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 4ஜி செல்போன் சேவையை பயன்படுத்துவதில் இருந்த தடை தற்போது நீக்கப்பட்டு உள்ளது.

‘தீபாவளி 2019’ சலுகையின் கீழ் ஜியோ போன் வாங்குபவர்களுக்கு ரூ.700 மதிப்புள்ள சலுகைகளும், முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக ரூ.99 மதிப்புள்ள டேட்டா பலன்களும் இலவசமாக கிடைக்கும்.

ஒவ்வொரு இந்தியனும் மலிவான இணைய வசதி மற்றும் டிஜிட்டல் புரட்சியின் பலன்களை பெறுவதை ஜியோ உறுதி செய்யும். ‘ஜியோ போன் தீபாவளி பரிசு’ வழங்குவதன் மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அனைவரையும் இணைய வசதிக்குள் கொண்டு வருவதற்காக ரூ.1,500 முதலீடு செய்கிறோம்’ என்றார்.

இந்த ஜியோ போனில் 2.4 அங்குல திரையும், 2 ஆயிரம் எம்.ஏ.எச். பேட்டரி வசதியும், 2 எம்.பி. பின்பக்க கேமரா மற்றும் 0.3 எம்.பி. முன்பக்க கேமரா வசதியும் உள்ளது.