சலங்கையில் சந்தானம்!

அபிநயித்து அசத்திய ஷோபனா ரமேஷ்

0
253
Shobana Ramesh

மகாராஜபுரம் சந்தானம் என்றாலே அந்த மயக்கும் குரல்தான் சங்கீதம் தெரிந்தவர்களுக்கு நினைவுக்கு வரும். அப்படியொரு பக்திபூர்வமான, பாவபூர்வமான இசையால் மிகப் பெரிய கூட்டத்தைக் கட்டிப்போட்டவர். அடியேனுக்கு அண்மையில் ஒரு சிந்தனை.. ‘பரத மேடைகளில் இப்போதெல்லாம் நிறைய வித்தியாசங்களை செய்கிறார்கள். மகாராஜபுரம் பிரபலப்படுத்திய தேன்வழியும் பாடல்களுக்கு ஏன் ஆடக்கூடாது?’. இந்த ஐடியாவை நடனக் கலைஞர் ஷோபனா ரமேஷிடமும், நடன ஆசிரியர் லலிதா கணபதியிடமும் சொன்னேன். ஏற்கனவே எம்.எஸ்ஸின் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டு ‘மாலை பொழுதினிலே’ என்ற பரத நிகழ்ச்சியை ஷோபானா வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். அதுவும் இதுபோல் எங்களுக்குத் தோன்றியதுதான். எனவே மகாராஜபுரம் ஐடியாவை சொன்னவுடனேயே அடுத்த நாளே ஷோபனாவும், லலிதா கணபதியின் ‘நூபுர்லயா பர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’ நடனப் பள்ளியும் களத்தில் இறங்கியது.

இதையும் படியுங்கள்: மெஹபூப்களின் நாகஸ்வரம்

எதற்கும் ஒரு நேரம் வரவேண்டாமா? மகாராஜபுரம் இந்த மண்ணைவிட்டுப்போய் இந்த ஜூன் வந்தால் 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த வாரம் பிரம்ம கான சபாவில் அரங்கேறியது ‘சலங்கையில் சந்தானம்’ . ஷோபானாவும், லலிதாவின் மாணவிகளும் அந்த மகாகலைஞனின் 12 பாடல்களை எடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொன்றும் ஒரு அழகு. சந்தானம் பல கச்சேரிகளில் பாடி ‘ஒன்ஸ்மோர்’ கேட்ட பாடல்கள். பெரும்பாலும் தமிழ்ப் பாடல்கள்.. இதில் ஊத்துக்காடு வேங்கட கவி, மகாகவி பாரதியின் பாடல்கள், மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாடல்கள் பிரதானமானவை.

சந்தானம் பல கச்சேரிகளில் பாடிய ‘போ சம்போ சுயம்போ’ என்கிற ரேவதி ராக கீர்த்தனைக்கு லலிதாவின் மாணவியும், புதல்வியுமான ஸ்ரீபத்மா அபிநயம் பிடித்தார். தயானந்த சரஸ்வதி இயற்றிய சிவனின் மகிமைகளை பக்திபூர்வமாக சொல்லும் கீர்த்தனை. ஸ்ரீபத்மா அழகாக அந்த உணர்வுகளை புரிந்து கொண்டு ஆடினார். ‘சரியாக ஆடுகிறோமா’ என்கிற சின்ன பதட்டம் முகத்தில் அவ்வப்போது தெரிந்ததைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி பாதபிரயோகங்களில் தடுமாற்றம் இல்லை. அதேப்போல மற்றொரு மாணவி ரேஷ்மாவுடன் அவர் ஆடிய ‘நீ தான் மெச்சிக்கொள்ளவேண்டும்’ என்ற ஊத்துக்காடு வேங்கடகவியின் ரஞ்சனி ராக பாடல்! கண்ணனின் தாயார் யசோதை, கோபியரி டம் ‘என் மகன் செய்யும் குறும்புகளை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்’ என்று பொய்கோபத்துடன் சொல்வது போல வரும் பாடல். இரண்டு பெண்களும் அழகாக அந்த பாவத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படியுங்கள்: கிருஷ்ண கானம் எப்படியிருக்கு?

இந்த நிகழ்ச்சியில் எல்லோரது கவனத்தையும் கவர்ந்த இன்னொரு பாடல்… பாரதியார் ‘சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா’ என்ற ராகமாலிகை; கண்ணமாவின் அழகை இயற்கையோடு வர்ணித்துப்பாடும் மகாகவியின் ரொமான்டிக் பாடல்.
பட்டு கரு நீலப்புடவை பதித்த நல் வைரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடி.. என்பது எவ்வளவு அமர்க்களமான கற்பனை. இப்பாடலுக்கு ஷோபனா ரமேஷ் மிகுந்த ரசனையோடு, அருமையாக ஆடினார். நடுத்தர வயதிலும் துளிக்கூட சோர்வடையாமல் ஆடியது அவரது அர்ப்பணிப்பை காட்டியது. மனது ஒன்றில் முழுமையான லயித்துவிட்டால் அப்புறம் உடம்பு எதற்கும் இடம் கொடுக்கும்! அதேபோல “சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா.. சாத்திரமேதுக்கடீ” என்ற வரிகளில் மகாராஜபுரம் கானடாவை கொஞ்ச, ஷோபனா தன்னை மறந்தார். அடுத்து அவர் ஏற்கனவே பல மேடைகளில் ஆடிய ‘சின்னஞ்சிறு கிளியே’, இங்கே சந்தானம் குரலில் நம்மை பரவசப்படுத்த, ஒவ்வொரு வரியையும் அனுபவித்து ஆடினார் ஷோபனா.
‘என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா’.
என்னுயிர் நின்னதன்றோ..’ என்ற வரிகளில் பாரதியின் அந்த தாய்ப்பாசத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றார். இந்தப் பெண்மணி சென்னை நாட்டிய மேடைகளில் பாரதி பாடல்களுக்கு அதிகம் ஆடுபவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இந்நிகழ்ச்சியில் ஹூசைனி ராகத்தில், கண்ணனின் விளையாட்டுத்தனங்களை விளக்கும் ‘ஆடும் வரை அவர் ஆடட்டும்’ என்ற கரும்பான பாடலுக்கு, ரேஷ்மா, சுசித்ரா, ஸ்ரீபத்மா மூவரும் காட்டிய அபிநயம் என் மனதைத் தொட்டது. இறுதியாக மகாராஜபுரம் சொந்தமாக இயற்றிய சிவரஞ்சனிராக தில்லானாவிற்கு அந்த விறுவிறுப்பு குறையாமல் ஆடினார்கள் லலிதாவின் மாணவிகள்.

இதையும் படியுங்கள்: செம்பொன்குடி சீனிவாச அய்யரின் கதை

நிகழ்ச்சியின் கடைசி வரை அமர்ந்து, மாணவிகளையும், ஷோபனாவையும் வாயார வாழ்த்திவிட்டு விடைபெற்றார் நல்லி குப்புசாமி செட்டியார். பாரம்பரிய வர்ணங்களுக்கும், ஜதி ஸ்வரங்களுக்கும் ஆடுவது ஒருபுறமிருந்தாலும், இது போன்ற மாறுபட்ட விஷயங்களைக் கொண்டு வரும்போது பரதம் அடுத்த கட்டத்திற்கு நகரும்! அதே சமயம், புரட்சி என்ற பெயரால் பரதம் என்ற அந்த மேடைக்கு ஒவ்வாத சமாச்சாரங்களைக் கொண்டு வரும் கூத்தும் அண்மைக் காலமாக நடக்கிறது. எது, பரதத்திற்கு புதிய பொலிவு தரும் என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம்!

இதையும் படியுங்கள்: இசைக்கோப்பையில் ததும்பி வழியும் மாண்டலின்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்