’சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை’ என்று மேற்கிந்தியத் தீவுகள் அணி விரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே நேற்று(புதன்கிழமை) நடந்த கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில், யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ரன்களைக் குவித்தார். அவர் 41 பந்தில் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்ததும் இந்திய வீரர்கள் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேற்கிந்தியத் தீவு அணி வீரர்களும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். இதனால் அவர் நேற்றைய போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் எனக் கூறப்பட்டது. 

ஏற்கனவே உலகக் கோப்பையுடன் கிறிஸ் கெய்ல் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்கு வழியனுப்பும் போட்டி ஒன்று நடத்தப்படும் என்றும் நேற்றைய இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி அவருக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின் பேசிய கிறிஸ் கெய்ல், ‘’நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை. இப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணியில்தான் தொடர்கிறேன். அடுத்த அறிவிப்பு வரும்வரை அணியில் தொடர்வேன்’’ என்று தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும்மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.