சர்ச்சைக்குரிய வகையில் கமல் பேசியதாக அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பயங்கரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு. பயங்கரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டார்கள். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. காந்தியாரின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதைச் சொல்கிறேன். 

ஏனென்றால் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே  என்றார். அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. அவர் பிரசாரம் செய்ய தடைகோரியும், அவரது கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே,  ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதாக கமல்ஹாசனுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாயா மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழகத்தில் கமல் பேசியதற்கு தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கமல் பேசியது கடுமையான தேர்தல் விதி மீறல் என்பதால் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடினோம் என்று மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும் கமல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமும் தங்கள் தரப்பில் இருந்து விளக்கத்தை முன்வைத்தது. இதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here