சர்ச்சைக்குரிய முகநூல் பதிவால் பெங்களூரில் வன்முறை; 3பேர் உயிரிழப்பு; இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்

0
531

பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத் தளத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

இந்த முகநூல் பதிவால் செவ்வாய்க்கிழமை பெங்களூரின் கிழக்கு பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து, போராட்டக்காரர்கள் எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் முர்த்தியின் வீட்டை சுற்றி முற்றுகையிட்டதோடு, பல வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர். 

இந்த கலவரத்திற்கு காரணமாக சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை பதிவிட்டவரை போலீசர் கைது செய்துள்ளனர். மேலும், போலீசாரை தாக்கியது, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது, வன்முறையில் ஈடுபட்டது என 110 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக பெங்களூர் போலீசார் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, டிஜி ஹாலி மற்றும் கேஜி ஹாலி பகுதியில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியும் கலைத்தனர்.


தொடர்ந்து வன்முறை பெரும் கலவரமானதையடுத்து, 150க்கும் மேற்பட்ட போலிஸார் காவல்துறை ஆணையர் எஸ்.டி ஷரனப்பா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் தீயைணைக்க சென்ற தீயணைப்பு வாகனங்களை தடுத்து நிறுத்திய கலவரக்காரர்கள் அந்த வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளே அனுமதிக்கவில்லை.

மேலும், வாகனங்களின் டயர்களை தீயிட்டு கொளுத்தி ஆங்காங்கே வீசிச் சென்றுள்ளனர். இதனால் புலிகேசி நகர், பாரதி நகர், கமர்ஷியல் தெரு, தன்னேரி பகுதிகள் பெரும் கலவர பூமியாக காட்சியளித்தது.

அதுமட்டுமின்றி, டி.ஜே ஹள்ளி காவல்நிலையத்தின் முன்பிருந்த வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டடுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார் மீது கற்கள் பாட்டில்களை கலவரக்காரர்கள் வீசியதால் போலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர்.

இதனிடையே கலவரக்காரர்கள் சாலையோரக் கடைகள், வாகனத்தை அடித்து நொருக்கி சேதப்படுத்துவதாக தகவல் வெளியானதையடுத்து, புலிகேசி நகரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், அப்பகுதியில் உள்ள இந்து கோவில் ஒன்றை சுற்றி நின்று மனித சங்கிலி அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டன.

இஸ்லாமியர்களின் இந்த மனித சங்கியைக் கண்ட கலவரக்காரர்களில் சிலர் அவர்களுடன் உடன் நின்றி இந்து கோவிலை பாதுகாத்தனர். இந்த சம்பவம் போலிஸார் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து 5 மணி நேரப்போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கலவரம் தொடர்பாக பேசிய புலிகேசி நகர் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி, “இது சில சதிகாரர்களின் வேலை. அவர்கள் நிலைமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வன்முறையை தூண்டிவிட்டுள்ளனர்.

காவல்துறையினரும், அரசும் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மக்களும் அமைதியாக கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here