சர்க்கரை வள்ளிக்கிழங்கு எண்ணற்ற சத்துக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தரக் கூடிய ஒரு அற்புதமான கிழங்கு. இனிப்பு சுவையுடன் உள்ள இந்த கிழங்கை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நிச்சயமாகக் கொடுக்க வேண்டும். எல்லாத் தரப்பினரும் உண்ணக்கூடிய இந்த அருமையான கிழங்கை வேக வைக்கலாம், பொரியல் செய்யலாம், சிப்ஸ் பண்ணலாம், இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.

நான் என் குழந்தைகளுக்கு வேக வைத்து அதன் மேல் சிறிது பனை வெல்லப்பாகு ஊற்றிக் கொடுப்பேன். இல்லையென்றால் சுண்டலுக்கு தாளிப்பதுபோல் தாளித்தும் கொடுக்கலாம்.

குலோப் ஜாமூன் எல்லோரும் விரும்பி உண்ணும் ஒரு பலகாரம். ஒரு நாள் குலோப் ஜாமூன் செய்யலாம் என்று பாக்கெட்டில் உள்ள பவுடரை பாத்திரத்தில் போட்டேன். தண்ணீர் ஊற்றி பிசைவதற்கு பதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்துப் போடலாம் என்று தோன்றியது. உடனே செய்ய ஆரம்பித்தேன். அருமையாக வந்தது; செய்வது மிகவும் சுலபம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவையான பொருட்கள்:

குலோப் ஜாமூன் பவுடர் – ஒரு பாக்கெட்
வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு -பிசைவதற்கு தேவையான அளவு
நெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

சர்க்கரைப்பாகு தயாரிக்க தேவையான பொருட்கள்:

சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – சர்க்கரை மூழ்கும் அளவு
ஏலக்காய்ப் பொடி அல்லது ரோஸ் வாட்டர் சிறிதளவு

செய்முறை:

குலோப் ஜாமூன் பவுடருடன் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெய்ப் போட்டு பிசையவும். பிறகு மிதமான சூட்டில் எண்ணையில் பொரித்து எடுக்கவும். எடுத்தவுடன் ஜீரா பாகில் போட வேண்டாம். எல்லாம் போட்டு முடித்ததும் சூடான பாகில் போடவும். சரியான பதத்தில் ஊறி இருக்கும்.

பாகு செய்யும் முறை:

சர்க்கரையுடன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் வைத்துக் காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் நிறுத்தி விடவும். பின்பு அதில் ஏலக்காய்ப் பொடி அல்லது ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இதுபோல் செய்து பாருங்கள், நன்றாக இருக்கும். சுவைத்து மகிழவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here