முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்கள் அதிகாலை ஐந்து மணிக்கே திரையிடப்படுகின்றன. விஜய்யின் சர்கார் படத்தை நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் ரஜினியின் 2.0 படத்தையும் நள்ளிரவு 12 மணிக்கு திரையிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரசிகர்களின் இந்த நள்ளிரவு மற்றும் அதிகாலை கொண்டாட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘அரசு விதிமுறைகளின்படி திரையரங்குகளில் வார நாள்களில் மூன்று காட்சிகளும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் நான்கு காட்சிகளும் மட்டுமே திரையிடப்பட வேண்டும் ஆனால் இந்த விதிமுறையை பெரும்பாலான திரையரங்குகள் பின்பற்றுவதில்லை. அரசு விதிமுறைகளை மீறி காலை ஐந்து மணி முதல் ஒரு நாளைக்கு ஏழு காட்சிகள்வரை திரையிடுகிறார்கள். சமீபத்தில் வெளியான சீமராஜா, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம் படங்களுக்கு சட்டத்தை மீறி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. எனவே சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 12 ஆம் தேதி மறுவிசாரணைக்கு வருகிறது.

பெரிய பட்ஜெட் படங்கள் வெளியான முதல் ஐந்து தினங்களுக்குள் போட்ட பட்ஜெட்டில் 80 சதவீதத்தை எடுத்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும். ஐந்து தினங்கள் தாண்டினால் திருட்டு டிவிடி, இலவச இணைய தரவிறக்கம் என பல சிக்கல்களை படம் எதிர்கொள்ள நேரிடும். இந்த ஐந்து நாள் டார்கெட்டுக்கு சிறப்புக் காட்சிகள் பெரிதும் உதவி வந்தன. இந்த வழக்கு காரணமாக வரும் நாள்களில் சிறப்புக் காட்சிகள் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்