சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் ஏ.ஆர்.முருகதாஸ், இதில் எந்த மாற்றமும் இல்லை என்று, சர்கார் வழக்கு முடித்து வைக்கப்பட்ட பிறகு முருகதாஸ் கூறியுள்ளார்.

சர்கார் படத்தின் கதை என்னுடைய செங்கோல் கதையை திருடி எடுக்கப்பட்டது என்று வருண் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வருணின் கதையையும், முருகதாஸின் சர்கார் கதையையும் ஒப்பு நோக்கிய எழுத்தாளர்கள் சங்கம், செங்கோல் கதையிலிருந்து 95 சதவீதம் எடுத்தே சர்கார் கதை எழுதப்பட்டிருக்கிறது என்று தீர்ப்பு சொன்னது. வருணுக்கு டைட்டிலில் கிரெடிட் தரவேண்டும் என்று எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ் கூறியதை ஏற்காத முருகதாஸ், நான் கோர்டில் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதனைத் தொடர்ந்து வருண் சர்கார் படத்தை தடைசெய்யக்கோரி நீதிமன்றம் சென்றார். இன்று அந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தது.

வருணுக்கு டைட்டிலில் கிரெடிட்டும், குறிப்பிட்ட பணமும் தருவதாகக்கூறி கதைப் பிரச்சனையில் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்யப்பட்டதாக முருகதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

இந்த விவகாரத்தில் துணிச்சலாக போராடிய பாக்யராஜுக்கு திரையுலகினர் நன்றி தெரிவித்து வரும் நிலையில் முருகதாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “வழக்கம்போல நிறைய வதந்திகள் இஷ்டத்துக்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. அதற்கான விளக்கம் இது. மதிப்பிற்குரிய பாக்யராஜ் சார் வந்து, ‘இதுமாதிரி பிரச்சினை போய்கிட்டு இருக்கு’ என்றார். ஒருவனுடைய ஓட்டைக் கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார்கள் என்று வருண் ராஜேந்திரன் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு கருவை வைத்துக் கதை எழுதியிருக்கிறார். அது ஒரு சின்ன பொறி.

மற்றபடி அந்தக் கதைக்கும், இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், நமக்கு முன்னாடியே ஒரு உதவி இயக்குநர் இதைப் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பதற்காக, அவரைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பத்தில் ஒரு கார்டு போடுங்கள் என்று பாக்யராஜ் சொன்னார்.

சரி என்று நானும் ஒப்புக் கொண்டேன். மற்றபடி சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையவே கிடையாது. தீபாவளி நல்வாழ்த்துகள்” என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here