சர்கார் படம் ஆளும் அதிமுக அரசையும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் தவறாக சித்தரிப்பதாகக் கூறி மதுரை சினிப்ரியா திரையரங்கு முன்பு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

சினிமா என்ற போர்வையில், நடிக்கிறேன் என்ற போர்வையில் தமிழக அரசின் திட்டத்தை விமர்சனம் செய்து, அரசு அளித்த பொருள்களை மக்கள் எரிப்பது போல் காட்டி, மக்களை வன்முறைக்கு தூண்டும் தீவிரவாதியைப் போன்ற செயலை விஜய் செய்திருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் விஜய்யையும், சர்கார் திரைப்படத்தையும் விமர்சித்துள்ளார். விஜய், முருகதாஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக கட்சியினர் மட்டுமின்றி, அவர்களது ஆதரவு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சர்கார் இந்த விமர்சனங்களை எதிர்கொள்ள என்ன காரணம்?

சர்கார் படத்தில் ஆளும் அதிமுக அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடும் காட்சிகள், வசனங்கள், சாயல்கள் நிறைந்துள்ளன. முருகதாஸ் இவற்றை நேர்மையாக வைத்திருக்கிறாரா என்றால் இல்லை. ஓரிடத்தில் ஒன்றாகவும், பிறிதொரு இடத்தில் வேறாகவும் இடத்திற்கு தகுந்ததுபோல் காட்டியுள்ளார். உதாரணமாக, ஆளும் கட்சியில் இருவர் முதன்மையான பொறுப்பில் இருக்கிறார்கள். ஒருவர் முதலமைச்சர் பழ.கருப்பையா. இன்னொருவர் நம்பர் டூ என அழைக்கப்படும் ராதாரவி. இவர்களின் பாத்திரப்படைப்பு நேரடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் பார்வையாளர்களுக்கு நினைவுப்படுத்தக் கூடியவை.

அதேநேரம், பழ.கருப்பையா தனது கட்சி மாநாட்டு பந்தலில் அமர்ந்திருக்கையில் விஜய் தரும் கோரிக்கைகள் அடங்கிய காகிதத்தை வாங்கிக் கொள்கிறவர், மலையாளத்தில் பேசுகிறார். தமிழ் படிக்க கத்துகிட்டது நல்லதாப் போச்சு என்கிறார். இந்த இடத்தில் பழ.கருப்பையாவை எம்ஜிஆரின் பிரதிபலிப்பாக காட்டுகிறார் முருகதாஸ். பழ.கருப்பையாவின் பேச்சு, தோற்றத்தை வைத்து பார்வையாளர்கள் அவரை கருணாநிதியின் பிரதிபலிப்பு என்று நினைத்துவிடாமலிருக்க வைத்த வசனத்தை போல், இந்த இடம் படத்தில் துருத்திக் கொண்டிருப்பதை காணலாம்.

பழ.கருப்பையாவின் மகளாக, அப்பாவையே கொலை செய்யும் வில்லியாக வரலட்சுமி வருகிறார். அவரது பெயர் கோமளவள்ளி. அவரை அனைவரும் பாப்பா என்றழைக்கிறார்கள். இந்த கதாபாத்திரம் ஜெயலலிதாவை பிரதிபலிக்கிறது என்பது முக்கியமான குற்றச்சாட்டு. ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி என்கிறார்கள் சிலர். தவறு. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் ஜெயலலிதாவை கோமளவள்ளி என்று விமர்சனம் செய்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அரசியல் வட்டாரத்தில் கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவை குறிப்பதாக நிலைப்பெற்றது. அவரை அம்மு என்று அழைப்பார்கள். இங்கே பாப்பா.

படத்தில் மிகவும் ஆட்சேபகரமான காட்சியாக பலரும் சொல்வது, தமிழக அரசுகள் அளித்துள்ள இலவசப் பொருள்களை தீயிலிட்டு கொளுத்தும் காட்சி. இலவசங்கள் கொடுத்ததால்தான் நாடு நாசமாகிப்போச்சு என்பது சர்கார் நாயகனின் வாதம். இலவசத்துக்குப் பதில் இலவச கல்வி, மருத்துவம் கொடுத்தால், அவனே அவனுக்கு தேவையானதை பெற்றுக் கொள்வான் என்பது சர்கார் முன்வைக்கும் வாதம்.

வளர்ந்த வல்லரசு நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் வீடு இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள், பட்டினியில் உழல்பவர்கள் இருக்கிறார்கள். பிரான்ஸ் போன்ற நாடுகள் அவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறது. முற்றாக வறுமை ஒழிப்பு இன்னும் சாத்தியமாகவில்லை. யுஎஸ், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளின் நிலையே இப்படி உள்ளது. இந்தியா மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட நாடு. ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை முட்டிக்கு கீழே, இடுப்புக்கு மேலே உடை உடுத்த அனுமதிக்கப்படாதவர்கள் வசித்த நாடு. இந்த கடுமையான ஏற்றத்தாழ்வுகளை ஓரளவு களைந்து இன்று தமிழகம் முன்னேறியிருக்கிறது என்றால் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்திற்கும், அதனை மேம்படுத்திய எம்ஜிஆரின் சத்துணவு திட்டத்திற்கும், இதேபோன்ற பல்வேறு இலவச திட்டங்களுக்கும் பெரும் பங்குண்டு.

கல்வி தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புவரை முழுமையாக இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதாவது அரசுப் பள்ளிகளில். இலவச மதிய உணவு, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச காலணி, இலவச பஸ் பாஸ் என்று இலவசங்களை மாணவர்களுக்கு அளித்ததனால்தான் இன்று தெருவுக்கு ஏழு இன்ஜினியர்கள் இருக்கிறார்கள். அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் ராஜீவ்காந்தி நினைவு மருத்துவமனைவரை எங்கும் எல்லாம் இலவசமே. இலவசமாக பைபாஸ் சர்ஜரிவரை இங்கே நீங்கள் செய்து கொள்ளலாம். திராவிட கட்சிகள் அளித்த இலவச மின்சாரம் போன்ற திட்டங்களே விதர்ப்பா போன்ற தற்கொலைக்களஞ்சியமாக தமிழகத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது. மக்களுக்கு அளிக்கும் இலவசங்களுக்கு செலவாகும் சில ஆயிரம் கோடிகளுக்கு கவலைப்படும் இவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தள்ளுபடி செய்யப்படும் லட்சக்கணக்கான கோடிகள் குறித்து பேசுவதேயில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை, சாதிய படிநிலைகளை, அவற்றை களைய திராவிட கட்சியினர் எடுத்த முயற்சிகளை, மொழிகாக்க, பிராந்திய தனித்துவம்காக்க செய்த தியாகங்களை, மாநில சுயாட்சிக்காக கொடுத்த குரல்களை, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்காக கொடுத்த விலைகளை, சமூக நீதிக்காக எடுத்த முயற்சிகளை… என்று எதையும் அறியாத, அறிய விரும்பாத வாட்ஸ் அப் தலைமுறை ஒன்று, ஊழலால் ஒழிந்தோம், இலவசத்தால் வீழ்ந்தோம் என்று பார்வேர்ட் மெசேஜ்களில் உளறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளை, இன்ஜினியரிங் கல்லூரிகளை தமிழகம் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மின்சாரம் என்ற கொள்கையை எப்போதே தமிழகம் அடைந்துவிட்டது. போக்குவரத்துத்துறையில் தமிழகம் அளவுக்கு அனைத்துத் தடங்களிலும் பேருந்தை இயக்கும் மாநிலம் இந்தியாவில் வேறு இல்லை. மென்பொருள் துறையில் கர்நாடகாவுக்கு அடுத்த இடத்தை தமிழகம் பெற்றதும் திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான்.

திராவிட ஆட்சிகளில் போதாமைகள் உள்ளன. ஊழல்கள் நிறைந்துள்ளன. இயற்கை சூழலை காப்பதற்கான திட்டம் நம்மிடையே இல்லை. இவற்றையெல்லாம் களைய வேண்டும். ஒரு திரைப்படம் இந்த குறைகளை நேர்மையாக அணுகினால் அதனை கொண்டாடுவதில் தவறில்லை. எந்த வரலாற்று புரிதலுமின்றி, இன்றைய வளர்ச்சிக்கு எப்படி வந்தடைந்தோம் என்ற பார்வையின்றி, வாட்ஸ் அப் தலைமுறைக்கு வால் பிடிப்பது போல் ஒரு படத்தை, அதுவும் 14 நாளில் தனி மனிதனால் புதிய தமிழகம் சுகப்பிரசவமாவது போல் காட்டினால் வரலாற்று பிரக்ஞை உள்ள யாருக்கும் கோபம் வரும்.

அதிமுக அமைச்சர்களின், கட்சியினரின் கோபம் இந்த வரலாற்று புரிதலிலிருந்து கிளம்பியதா என்பதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனால், சர்கார் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here