சரவண பவன், அஞ்சப்பர் உணவகங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 120 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் ஆகிய உணவகங்களிலும், ஹாட் பிரட் பேக்கரி மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் இனிப்பு விற்பனை நிறுவனங்களிலும் கடந்த ஜனவரி 3ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

4 நிறுவனங்களின் கிளைகள், உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள் என 32 இடங்களில் 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றை ஆய்வு செய்தபோது, கடந்த 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்வதற்காக, 4 நிறுவனங்களும் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சரவணபவன், அஞ்சப்பர் ஆகிய உணவகங்களுக்கு வெளிநாடுகளில் கிளைகள் உள்ளன. அதேபோல், ஹாட் பிரட் பேக்கரியும், கிராண்ட் ஸ்வீட்ஸ் இனிப்பகமும், வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

இந்த 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து திரட்டும் வருவாயை மறைத்து, வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கு வழங்கப்படும் வரிச் சலுகையை 4 நிறுவனங்களும் முறைகேடாக பயன்படுத்தி, அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், 4 நிறுவனங்களும் வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதாக கணக்கு காட்டுவதற்கு, துபாயில் போலி நிறுவனங்களை உருவாக்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

120 கோடி ரூபாய் வரி ஏய்ப்புடன், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை முறைகேடும் இருப்பதால், அது தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறும் வருமான வரித்துறையினர், 4 நிறுவனங்களிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here