சம்யுக்தா கிசான் மோர்ச்சாவிடம் பேசி உயிரிழந்த விவசாயிகள் பட்டியலைப் பெற்று, விவசாயிகள் பெயரையும், அவர் எந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதையும் சரிபார்த்திருக்க முடியும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று ப சிதம்பரம் உயிரிழந்த விவசாயிகள் குறித்த புள்ளி விவரங்கள் இல்லை என்ற மோடி அரசுக்கு பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் சார்பில் நடந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்து பேசியதாவது – ‘விவசாயிகள் போாரட்டத்தில் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை. வேளாண் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் உயிரிழந்தது குறித்து எந்த புள்ளிவிவரங்களும், ஆவணங்களும் இல்லை
அந்த வேளாண் சட்டங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டன. விவசாயிகள் யாரும் போராட்டத்தில் உயிரிழக்காதபோது, அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பற்றிய கேள்விக்கே இடமில்லை’ எனத் தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விவசாயிகள் உயிரிழப்பில் இழப்பீடு தரும் விவகாரத்தில் தொடக்கமாக, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் ஆட்சியின்போது போராட்டத்தில் விவசாயிகள் இறந்தது (220பேர் உயிரிழப்பு) குறித்து எண்ணிக்கையை மத்திய அரசு கேட்டிருக்கலாம். அடுத்ததாக, மத்திய தகவல் அமைச்சகத்திடம் பேசி, பழைய நாளேடுகளில் இருந்து பல்வேறு மாநிலங்களில் வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் விவரம் குறித்து கேட்டிருக்க முடியும்.
இறுதியாக சம்யுக்தா கிசான் மோர்ச்சாவிடம் பேசி உயிரிழந்த விவசாயிகள் பட்டியலைப் பெற்று, விவசாயிகள் பெயரையும், அவர் எந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதையும் சரிபார்த்திருக்க முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்று பதிவிட்டுள்ளார்.