புனே போலீஸார் டெல்லி, பரீதாபாத், கோவா, மும்பை, தானே, ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தப்பட்டது.

ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக ஒன்பது செயற்பாட்டாளர்களின் வீடுகளில் இன்று புனே போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வரவரா ராவ், சமூக செயற்பாட்டாளர்கள் வெர்னான் கான்செல்வ்ஸ், அருண் ஃபெரெய்ரா, மனித உரிமை செயற்பாட்டாளர் கௌதம் நவ்லக்கா ஆகியோரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.

பல நகரங்களிலும் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை ) நடத்தப்பட்ட ரெய்டுகள் முற்றிலும் ஆபத்தான ஒரு போக்கு என்று பிரபல எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் கூறியுள்ளார் . இவ்வாறு நடப்பது நாடு மீண்டுமொரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை போன்று இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் கொலை செய்பவர்கள், கும்பல் வன்முறையைத் தூண்டி விடுபவர்கள், கும்பல் கொலை செய்பவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படாமல், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமைப் போராளிகள், அறிவுஜீவிகள் ஆகியோரது வீடுகள் சோதனையிடப்படுவது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை நமக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

கொலை செய்பவர்களை கௌரவிக்கபடுகின்றனர், கொண்டாடப்படுகின்றனர். இந்துத்துவாவுக்கு எதிராக பேசினாலும் , நியாயம் கேட்டு பேசினாலும், பேசுவோர் அனைவரும் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர் என்று இந்த கைதுகள் பற்றி அருந்ததி ராய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தல்களுக்காக இவ்வாறு நடைபெறுகிறது.இவ்வாறு நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும். இல்லையெனில் நாம் அனுபவித்து வரும் அனைத்து சுதந்திரங்களையும் இழப்போம். இல்லையென்றால் நாம் அனைவரும் மீண்டுமொரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவோம் என்று அருந்ததி ராய் எச்சரித்துள்ளார்.

டெல்லி, பரீதாபாத், கோவா, மும்பை, தானே, ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

பிரதமர் மோடியைக் கொல்ல திட்டம் தீட்டியதாக கூறி மாவோயிஸ்ட் சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளர் வரவரா ராவ் புனே போலீஸாரால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பீமா – கோரேகானில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மும்பை, நாக்பூர், டெல்லியில் சிலரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாவோயிஸ்ட்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ரேனா ஜேக்கப் என்பரும் ஒருவர். அவரிடம் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அந்தக் கடிதத்தில், ராஜிவ் காந்தியை கொன்றது போல மோடியை கொல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 8 கோடி மதிப்பில் எம்-4 ரக துப்பாக்கியும்,4 லட்சம் ரவுண்ட் புல்லட்களும் வாங்குவது பற்றியும் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அந்த கடிதத்தில், வரவரா ராவின் பெயரும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள கோரேகான் என்ற இடத்தில், கடந்த 1818ஆம் ஆண்டு, உயர் ஜாதியினருக்கு எதிராக நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் வெற்றிபெற்றனர்.

இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் ஜன.1ஆம் தேதி, தலித் சமூகத்தினர்கள் போர் வெற்றிதினமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜனவரி ஒன்றாம் தேதி தலித் செயற்பாட்டாளர்களுக்கும் மராட்டிய சாதி இந்துக்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here