ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக ஒன்பது செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக்காவலை, வரும் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வரவரா ராவ், சமூக செயற்பாட்டாளர்கள் வெர்னான் கான்செல்வ்ஸ், அருண் ஃபெரெய்ரா, மனித உரிமை செயற்பாட்டாளர் கௌதம் நவ்லக்கா ஆகியோரை புனே போலீஸார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து 5 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக சிறையில் அடைக்காமல், காவல்துறையினரின் பாதுகாப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, 6-ஆம் தேதி நடைபெற்ற வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக்காவலை 12-ஆம் தேதி வரை நீட்டித்து ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்களது வீட்டுக்காவலை மேலும் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்