பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்று சமாஜவாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

பிரியங்கா காந்தி முழு நேர அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தது.

இந்த இரு கட்சிகளும் காங்கிரஸை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ளவில்லை. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனிடையே, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இது தேசிய அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதுடன், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸூக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாகவும் கருதப்பட்டது.

சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள், தங்களைப் புறக்கணித்ததற்கு காங்கிரஸ் அளித்த பதிலடியாகவும் இது கருதப்படுகிறது.
இந்நிலையில், லக்னெளவில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் ஈடுபடுவது காங்கிரஸ் கட்சியின் மிகமுக்கியான நடவடிக்கை என்பதில் சந்தேகம் இல்லை. இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும். அப்போதுதான் நாடு உத்வேகத்துடன் பயணிக்கும். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாஜக மிகப்பெரிய பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இங்கு அக்கட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஏனெனில், சோனியா காந்தி, ராகுல் காந்தியின் தொகுதியில் காங்கிரஸூக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. அவர் அமல்படுத்திய பசுவதைத் தடுப்புச் சட்டத்தால், அநாதையாக கைவிடப்பட்ட வயது முதிர்ந்த பசுக்கள், விளை நிலங்களை தொடர்ந்து நாசமாக்கி வருகின்றன. எனவே, இந்தப் பிரச்னையில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அவரது அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அயோத்தி ராமர் கோயில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள நிலையில், அதனை தங்களிடம் கொடுத்தால் 24 மணி நேரத்தில் முடிப்போம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதில் இருந்து எந்த அளவுக்கு பொறுப்பற்ற முதல்வர் இங்கு உள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here