சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் கோயிலில் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அத் தீர்ப்பை ராகுல் காந்தி வரவேற்றார். ஆனால் அத் தீர்ப்பை, கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் விமர்சித்திருந்தனர்.

அதே நேரத்தில் அதனை வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரை கூறி வந்தார். பல நேரங்களில் இதுபற்றி கருத்து கூறுவதை தவிர்த்து வந்தார்.

இந்தநிலையில், துபையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருடன் சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினேன். அவர்கள் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தனர். முன்பிருந்ததைவிட கேரளத்தில் தற்போது நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்பதை அதன்மூலம் உணர்ந்து கொண்டேன்.

சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை அந்த மாநில மக்களே முடிவு செய்யட்டும்.

முன்பு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் தற்போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சபரிமலை விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாத நிலைமையில் இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here