சபரிமலை; வன்முறையில் ஈடுபட்டவர்களில் 91.71% பேர் சங்பரிவாரத்தினர்: பினராயி விஜயன்

0
387

சபரிமலை வன்முறையில் ஈடுபட்டவர்களில் 91.71 % பேர் சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்ற பல்வேறு இளம் பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர். இந்த சூழலில் கடந்த வாரம் இரு பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் சாமி தரிசனம் செய்தார். இவர்கள் அனைவருமே 50 வயதுக்குட்பட்டவர்கள்.

இதைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் கேரளாவில் போராட்டங்களை தீவிரப்படுத்தின. அவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து, 80க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

கன்னூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோழிக்கோடு, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. கன்னூர் மாவட்டம், தலச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏல ஷம்ஷீர் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுத் தப்பினர். கேரள பாஜக எம்.பி. முரளிதரன் வீட்டிலும் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ”கேரளாவின் சட்ட, ஒழுங்கைக் குலைக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக ஆகியவை முயன்று வருகின்றன. வன்முறையில் ஈடுபட்டவர்களில் 91.71% பேர் சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள். இதில் மக்கள் பிரதிநிதிகள், ஊடகத்தினர், வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களில் தாக்குதல் நடத்தியவர்களும் அடங்குவர்.

இதையடுத்து, முழு அடைப்புப் போராட்டத்தின்போது பொது மக்களின் தனிப்பட்ட சொத்துகளைப் பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உரிய இழப்பீடு வழங்கவும் அவசரச் சட்டம் கொண்டு வர கேரள அரசு முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here