சபரிமலையில் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்று கேரள அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்குத் தடை இருந்து வந்தது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், அதுதொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள அரசு மற்றும் தேவசம் போர்டு முடிவு செய்தது.

இந்தத் தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காகத் புதனன்று (இன்று) திறக்கப்படுகிறது.  ஐந்து நாட்களுக்கு பிறகு 22-ம் தேதி நடை அடைக்கப்படுகிறது. 

சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் வரும் வாகனங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள்  சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் பம்பை அடிவார முகாம் பகுதியில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரராகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு உண்டானது. 

அதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அவர்களைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்று கேரள அமைச்சர் கே .கே.சைலஜா தெரிவித்துள்ளார். 

சபரிமலை போராட்டம்  உள்நோக்கம் கொண்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல. ஏனென்றால் இறைவனின் முன்னால் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அவர்கள் எவ்வாறு அங்கு பெண்களைத் தாக்கலாம்?  

இந்தப் போராட்டத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று  கேரள அமைச்சர் கே .கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here