சபரிமலையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்பி) யதீஸ்சந்திரா மீது மத்திய உள்துறை அமைச்சகத்தில் கேரள பாஜக புகார் அளித்துள்ளது.

சபரிமலையில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை பக்தர்களுக்கு போலீஸார் விதித்துள்ளனர். அதன்படி, பக்தர்களின் வாகனங்கள் சபரிமலையின் நுழைவாயிலான நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து அரசு பேருந்தில்தான் பம்பை செல்ல வேண்டும். இந்நிலையில், புதன்கிழமை காலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் சென்றனர்.

இவர்களின் கார், நிலக்கல்லை அடைந்ததும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் யதீஸ்சந்திரா, மத்திய அமைச்சருடன் வந்தவர்களின் காரை தடுத்து நிறுத்தினார். அமைச்சரின் காரைத் தவிர மற்றவர்களின் வாகனங்கள் நிலக்கல் தாண்டி அனுமதிக்கப்படாது என்று கண்டிப்பாகக் கூறினார். இதனால், அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும், எஸ்பி யதீஸ்சந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, பாரதிய ஜனதா நிர்வாகிகளின் கார்களை அனுமதிக்காததால் பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்ஸில் பம்பை சென்றார்.

இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்பி யதீஸ்சந்திரா மீதும், கேரள அரசு மீதும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கேரள பாஜக புகார் அளித்துள்ளது.

ஐயப்பனை தரிசிக்க வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வாகனத்தையே கேரள போலீஸார் அனுமதிக்கவில்லை. மத்திய அமைச்சர் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேரள காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், சபரிமலையில், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய காவல்துறைக் கண்காணிப்பாளர் யதீஸ் சந்திரா மீது மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும், ஐயப்ப பக்தர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் கேரள அரசு மீதும் புகார் அளித்துள்ளோம் என்று கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here