உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 620 கி.மீ. தொலைவுக்கு நீண்ட ‘மகளிர் சுவர்’ என்னும் பெண்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சி இன்று (செவ்வாய்கிழமை ) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 30 லட்சத்துக்கும் மேலான பெண்கள் பங்கேற்றுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் சென்று வழிபட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. . இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்டோர் கேரளாவில் தொடர் போராட்டங்களில் இறங்கினர். இதற்காக பிரமாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன. கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி கூட ‘ஐயப்ப ஜோதி’ என்னும் தீபங்கள் ஏற்றும் விழாவை நடத்தினார்கள்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கேரளாவின் முக்கிய பெண்கள் அமைப்புகள் பலவற்றுடன் முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பின் முடிவில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வலியுறுத்தி, கேரளாவில் செயல்படும் பெண்கள் அமைப்புகள் சார்பில் பெரிய மனித சங்கிலி போன்ற பெண்களின் மதில் அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ‘வனிதா மதில்’ என்று பெயரிடப்பட்ட இந்த பெண்களின் மதில் சுவர் போராட்டம் செவ்வாய் மாலை நடந்தது.மாலை மூன்று மணிக்கு இந்த போராட்டம் தொடங்கியது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை, மொத்தம் 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து சங்கிலி போல சாலை ஓரம் நின்றார்கள்.

காசர்கோட்டில் நடந்த தொடக்க விழாவில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். 3.30 மணிக்கு பெண்கள் தங்கள் கைகளை இணைக்க தொடங்கி 4.30 மணி வரை சங்கிலி போல அணிவகுத்து நின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here