உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்குத் தடை இருந்து வந்தது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், அதுதொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல. எனவே அவர்கள் மனு மீது விசாரணை நடத்தி தீர்ப்பு தர வேண்டிய அவசியம் இல்லை. கோயில் சம்பிரதாயங்கள் தொடர்பாக முறையிடுவதற்கு பக்தர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

சபரிமலை கோயிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. மத நம்பிக்கை விவகாரங்களில் அரசியல் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது பக்தர்களின் தரப்பை கேட்கவில்லை. பக்தர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியலிடப்பட்டு வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

(இந்தச் செய்தி பல்வேறுத் தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here