கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்குத் தடை இருந்து வந்தது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதுதொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தீர்ப்பை எதிர்க்கும் ஏராளமான ‘‘பெண்கள் 50 வயது வரை காத்திருக்க தயார்’’ எனக் கூறி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கேரளாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்டயம், சங்கனாச்சேரி, ஆரண்மூலா உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சங்கனாச்சேரியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பேரணியில் முஸ்லிம் லீக் கட்சியினரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், பந்தளம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகம் வரையிலும் 5 நாட்கள் தொடர் பேரணி நடத்த பாஜக, இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அக்டோபர் 10 ஆம் தேதி இன்று முதல் இந்த பேரணி ஆரம்பித்திருக்கிறது.

ஐயப்பன சேவா சங்கம், பக்தர்கள் பேரமைப்பு, என்எஸ்எஸ் எனப்படும் நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த பேரணி பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது. பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி தலைமையில் இந்த பேரணி நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஐதீகத்தை காப்பாற்றக்கோரியும், உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பியபடி பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்