சனி தோஷத்தை போக்கும் பரிகாரம்

0
926

ஒரு குலத்தில் பிறக்கின்ற குலவாரிசு என கருதப்படும் மகன், தனது தந்தை இறந்த பிறகு, அவரின் ஆன்மா “புத்” எனும் நரகத்தில் விழாமல் காக்கிறான் என வேதங்கள் கூறுகின்றன. எனவே தான் மகனுக்கு “புத்திரன்” என்கிற பெயர் உண்டானது. இல்லற வாழ்க்கைக்கு அழகையும், அர்த்தத்தையும் கொடுப்பது தம்பதிகளுக்கு பிறக்கின்ற குழந்தை செல்வம் தான். எனினும் திருமணமான அனைவருக்குமே குழந்தை பாக்கியம் கிடைத்து விடுவதில்லை. இதற்கு தம்பதிகளின் கர்மவினையும், ஜாதகத்தில் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதகமான நிலையம் காரணங்களாகின்றன. அந்த வகையில் திருமணமான ஒருவருக்கு சனி பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் பற்றியும் அது நீங்குவதற்காக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்குமானால் அந்த ஜாதகத்திற்குரிய நபர் ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் முற்பிறவியில் தங்களிடம் பணிபுரிந்த வேலைக்காரர்களுக்கு சரியாக ஊதியம் கொடுக்காமலும், நல்ல உணவு, ஆடை வழங்காமல், கடுமையாக பணிகளை செய்ய வைத்தும், உடல் மற்றும் மனரீதியில் துன்புறுத்தியதாலும், அந்த பணியாளர்களின் சாபத்தை பெற்று இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உண்டாகியிருப்பதை அறியலாம். ஜாதகத்தில் சனி கிரகம் காரணமாக தான் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து சனி பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.

200 கிராம் கறுப்பு எள் அல்லது வெள்ளை எள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை சமபாகமாக பிரித்து, ஒரு கருப்பு நிற துணியை துணியை ஒன்பது துண்டுகளாக வெட்டியெடுத்து, பிரித்து வைத்த ஒவ்வொரு பங்கு எள்ளையும் ஒன்பது துணிகளில் போட்டு முடிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒன்பது துணி முடிப்புகளையும் உங்கள் வீட்டு பூஜையறையில் சாமி படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையையும் எடுத்து வைத்து விட வேண்டும். பூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.

மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, சனி பகவானை மனதில் நினைத்து “சனி பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும்” என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.

இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது எள் தானியங்கள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு சனி கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக சனீஸ்வர பகவான் அருள் புரிவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here