‘சந்தை சரிய வாய்ப்பு உண்டு’

0
406

கடந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று முதலீட்டாளர்கள் சற்றும் கணித்திருக்க மாட்டார்கள் இப்படியொரு வீழ்ச்சியை. அதுவும் ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியது.

கடந்த திங்கட்கிழமையன்று வர்த்தகம் நிறைவடைந்த போது சென்செக்ஸ் 1624.51 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டி 491 புள்ளிகள் சரிந்தது. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட 30 நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. அதேப் போல் நிஃப்டியில் பட்டியலிடப்ப்ட்ட 50 நிறுவனங்களில் 49 நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புகள் சரிந்தன. சந்தை சரிவுக்குக் கூறப்பட்ட காரணங்களில் சீனாவின் நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலைச் சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஆசியப் பங்குச் சந்தைகளின் சரிவுகளும் இந்தியப் பங்குச் சந்தையில் பெரிய இழப்பை ஏற்படுத்தின. அன்று மட்டும் பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ஏழு லட்சம் கோடி ரூபாய்.

மத்திய அரசு, சரக்குகள் மற்றும் சேவை வரி உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து பரிசீலினை செய்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்களில் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையானது செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தைகள் உயரக் காரணமாக அமைந்தன. இதற்கிடையில், இந்தியப் பொருளாதார நிலை வலுவாக உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்ததையடுத்து பங்குச் சந்தை மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கியது.

திங்கட்கிழமை 1624.51 புள்ளிகள் சரிந்து 25,741.56 புள்ளிகளுடன் நிறைவடைந்த வர்த்தகம், செவ்வாய்க்கிழமையன்று 291 புள்ளிகள் உயர்ந்து 26,032.38 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. அதேப் போல் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 7880.70 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவுபெற்றது.

29-august

வியாழக்கிழமையன்று முன்பேர வர்த்தகக் (future & options) கணக்கு முடிவடைவதால், புதன்கிழமையன்று வர்த்தகத்தில் இறக்க நிலை வரலாம் என கூறப்பட்டது. அது போன்றே, சென்செக்ஸ் 318 புள்ளிகளும், நிஃப்டி 88 புள்ளிகளும் சரிந்தன. வியாழக்கிமையன்று ஆசியச் சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் ஏற்றத்தைக் கொடுத்தன. இதனையடுத்து வியாழக்கிழமையன்று சென்செக்ஸ் 516 புள்ளிகளும், நிஃப்டி 157 புள்ளிகள் உயர்ந்தன. அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்றும் சந்தைகள் ஏற்றத்துடேனே வர்த்தகத்தை நிறைவு செய்தன.

29-august market

உயர்வைக் கண்ட பங்குகள்

கெயிர்ன் இந்தியா : 2.75%
கோல் இந்தியா : 2.55%
டாடா மோட்டார்ஸ் : 2.30%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் : 1.31%
ஐடியா செல்லுலர் : 0.95%

சரிவைக் கண்ட பங்குகள்

டாடா பவர் : 10.22%
அம்புஜா சிமெண்ட் : 9.23%
டெக் மகேந்திரா : 8.30%
மாருதி சுசுகி : 7.91%
கெயில் இந்தியா : 7.16%

அன்னிய செலவாணி கையிருப்பு

ஆகஸ்ட் 14இல் 35,144 கோடி டாலராக இருந்த அன்னிய செலவாணி கையிருப்பு, தற்போது 92 கோடி டாலர் உயர்ந்து 35,536 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

சந்தை சரிய வாய்ப்பு உண்டு

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், சந்தை சரிய வாய்ப்புண்டு என்றும், அந்த சரிவு மெதுவாக ஏற்படலாம் அல்லது ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்கள், சந்தை காளையின் பிடியில் இருக்குமா அல்லது கரடியின் ஆதிக்கத்தில் இருக்குமா என்று பார்ப்போம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்