சந்தேகங்களுக்கு உள்ளான வகையில் இடமாற்றம் செய்யப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள்; வெளியாகியிருக்கும் வீடியோ

0
352

 உத்தரபிரதேசத்திலும் , பீகாரிலும் எந்த ஒரு பாதுகாப்பு இல்லாமல் வாக்குப்பதிவு  எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு இடமாற்றம் செய்யப்படுகிறது என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த பல வீடியோக்களும் வெளியாகியுள்ளது.   

கஜிபூர், சந்தூலி, டோமரியாகஜ், ஜான்சி போன்ற இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் வாக்குப்பதிவு  எந்திரங்கள்  எடுத்துச் செல்லப்பட்டது.   

இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்கிறது என்று பல குற்றச்சாட்டுகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்  இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்றும் வாக்குப்பதிவு  எந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் பல்வேறுக் கட்சிகளின் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது என்று கூறியுள்ளனர் . 

ஜான்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஏஎன்ஐ யிடம் பேசுகையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு காலை 7 மணிக்கு பாதுகாக்கப்பட்ட அறைக்குள் கொண்டுசெல்லப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையும் பொதுவான கண்காணிப்பாளர்கள், மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், சிசிடிவி கேமரா கண்காணிப்பின்கீழ் சீல் வைக்கபட்டது என்றார்.   

உத்தரபிரதேசம் , சந்தூலியில் ஒரு லாரி நிறைய வாக்குப்பதிவு  எந்திரங்களைக் கொண்டு சென்ற போது பிடிபட்டது , பரபரப்பை உண்டாக்கியது. 

அந்த வீடியோவில் பேசுபவர் வாக்குப்பதிவு முடிந்து ஒரு நாளைக்குப் பிறகு ஏன் வாக்குப்பதிவு எந்திரங்களை இங்கே எடுத்து வருகிறீர்கள் ? என்று கேட்கிறார்.   

பதிலுக்கு அவர்கள்,  அதிகாரிகளின் வேண்டுகோளின்படியே இந்த வாக்குப்பதிவு  எந்திரங்களை நாங்கள் இங்கு கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறுகிறார்.  

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்  காங்கிரஸ் , சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் அவர்களின் தொண்டர்களை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்கு வெளியே  பாதுகாப்புக்காக  நியமித்திருக்கிறார்கள். 

திங்கள்கிழமை இந்த லாரி கட்சித் தொண்டர்களால் பிடிக்கப்பட்டது , இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பாஜக வாக்குப்பதிவு  எந்திரங்களைத் தவறாக பயன்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு வைத்தன. 

ஹரியானாவிலும் இவ்வாறு ஒரு லாரி முழுக்க வாக்கு எந்திரங்களை பாதுகாப்பு இல்லாமல் கொண்டுச் செல்லப்பட்டது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது  

காஜிப்பூர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அப்சல் அன்சாரி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து வாகனத்தில் ஏற்றும்போது நேற்று இரவு எதிரிப்புத் தெரிவித்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகியது.

சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அஃசல் அன்சாரி  வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.  வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்களில் கொண்டுச் செல்லப்பட்டது என்கிறார் அஃசல் அன்சாரி. 

இந்த வீடியோவில் அன்சாரியும் அவரது தொண்டர்களும் போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சந்தூலியில் நடந்ததுபோல் கஜிபூரில் நடக்கிறது என்று கூறுகிறார் அவர். 

பீகார் மகாராஜ்கஞ்ஜ் -இல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்ட லாரி ஒன்றை  ராஷ்டிரிய ஜனதா தளத் தொண்டர்கள் சிறைப்பிடித்தனர் என்று அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். 

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான சில ஒளிப்படங்களை பதிவிட்டுள்ளனர்  . 

வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒரு சின்ன லாரியில் கொண்டுவரப்பட்டு, சரண், மகாராஜ்கஞ்ஜ்  ஆகிய இடங்களில் இருக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வைக்க முற்பட்டது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கூறுகிறது .  

பாஜக சட்டவிரோதமாக ஏதோ செய்ய நினைக்கிறது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அவர்களது கட்சித் தொண்டர்களை இதுமாதிரியான சம்பவங்கள் மேலும் நிகழாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுமாதிரியான சம்பவம் உத்தரபிரதேசம் ஜான்சியிலும் நடந்துள்ளது என்பதற்கான வீடியோவை அக்கட்சி ரீடிவீட் செய்துள்ளது. 

மேலும் தேஜஸ்வி யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் ” வடஇந்தியா முழுவதும் வாக்கு எந்திரங்கள் நள்ளிரவில் திடீரென இடமாற்றம் செய்யப்படும் வீடியோக்கள் வருகின்றன. ஏன் இடமாற்றம் செய்யப்படுகிறது. இந்த வாக்கு எந்திரங்களை யார் இடமாற்றம் செய்வது. எந்த காரணத்துக்காக இடமாற்றம் செய்கிறார்கள், அதன் நோக்கம் என்ன. குழப்பத்தையும், தவறான புரிதலையும் தவிர்க்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு செய்யப்பட்ட  எந்திரங்கள் , வாக்குப்பதிவு செய்யப்படாத எந்திரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேரதல் ஆணையத்தின் விதிமுறைகளில்  கூறுவது என்னவெனில்  –   வாக்குப்பதிவு செய்யப்பட்ட  எந்திரங்கள், வைப்பு (மீதமுள்ள வாக்குப்பதிவு செய்யப்படாத )  வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் முடிந்தபிறகு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களால் பாதுகாக்கப்பட வேண்டும். 

பாதுகாக்கப்பட்ட மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு செய்யப்பட்ட  எந்திரங்கள் ரசீது கொடுக்கும் மையங்களுக்கு சென்ற பிறகு பாதுகாக்கப்பட்ட மையங்களுக்கு செல்ல வேண்டும். 

வாக்குப்பதிவு செய்யப்பட்ட  எந்திரங்கள் அதற்காக கொடுக்கப்பட்ட பாதுகாப்புள்ள  அறையிலும், வைப்பு (மீதமுள்ள வாக்குப்பதிவு செய்யப்படாத )  வாக்குப்பதிவு எந்திரங்கள் அதற்காக கொடுக்கப்பட்ட பாதுகாப்புள்ள அறையிலும் வைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதிமுறைகள் கூறுகிறது  . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here