சென்னையில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 2017ஆம் ஆண்டு மேமாதம் சென்னை வடபழனி பெருமாள்கோவில் தெற்குத் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேர்ந்த தீவிபத்தில் 4பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டடம் விதிமீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால் இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டவிரோதக் கட்டடம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும், விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? என்றும் நீதிபதிகள் வினா எழுப்பினர். இது குறித்துச் சென்னைமாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர். இதுபோல் தீவிபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மனுதாரர் நேரடியாகப் பாதிக்கப்படாததால் அதைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here