சட்டப் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

0
177

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்கி, ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் ஒவ்வொரு துறைக்கான மானியக் கோரிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். 

இந்நிலையில், பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்த போவதில்லை என்ற திமுகவின் கடிதம் ஏற்கப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னை குறித்து, சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தின் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தண்ணீர் இல்லாமல் தமிழகம் தத்தளித்து வருகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020-ல்தான் சென்னையில் குடிநீர் பஞ்சம் என நீதி அயோக் அறிக்கையில் உள்ளது, ஆனால், 2019-லேயே ஏற்பட்டுவிட்டது

தமிழகத்தில் ஏரிகள் வறண்டு போய் உள்ளன, பல குடியிருப்புகளில் தண்ணீர் இல்லை. தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க, ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற வேண்டும். 

ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டுவருவதும், லாரிகளில் தண்ணீர் கொண்டு வருவதும் வரவேற்கத்தக்கது என்றார். 

அப்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி ஸ்டாலின் பேசினார். ஆனால், அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் தனபால் நீக்கினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தண்ணீர் பிரச்னை தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து பேசினேன். அனைத்து உறுப்பினர்களும் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். புதுவை ஆளுநர் தமிழக குடிநீர் பிரச்னை குறித்து தெரிவித்த கருத்து ஏற்புடையதல்ல. அரசியல் கட்சி என்றால் கூட பரவாயில்லை. ஆனால், தமிழக மக்களை கோழை என ஒரு ஆளுநர் அபத்தமாகப் பேசினார். இதுகுறித்து பேச எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  

கிரண் பேடி மீது வழக்கு இருப்பதால் அவர் ஆளுநரே கிடையாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். ஆனால், நான் பேசியது மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. எனவே தார்மீக அடிப்படையில் வெளிநடப்பு செய்தோம். இந்த ஆட்சியில் அறிவிப்புகள் மட்டும் தான், செயல்பாடுகள் கிடையாது என்று தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here