சஞ்சயின் பணப்பாட்டு கேட்டீங்களா?

சஞ்சய் சுப்ரமணியனின் இந்தப் பாட்டுதான் சீசனின் பெரிய ஹிட்.

1
543
படம் நன்றி: சரோஜ் குமார் மிஸ்ரா

அசாத்திய உழைப்பு, ஜனரஞ்சகம், ஞானம் ஆகிய மூன்றுமே சஞ்சய் சுப்ரமணியத்தின் பெரிய வெற்றிக்குக் காரணங்களாக இருக்க முடியும் என்று அவர் கச்சேரிகளைத் தொடர்ந்து கேட்பவர்கள் சொல்லிவிடலாம். இன்று பாரத் கலாச்சாரிலிருந்து, பார்த்தசாரதி சபா வரை சென்னையில் அவர் எங்கு பாடினாலும் திமுதிமுவென்று விஜய் பட முதல் ஷோ போல கூட்டம் கூடிவிடுகிறது. தவிர, அவரைப் புரிந்துகொண்டு வாசிக்கக்கூடிய பக்கவாத்யம்-குறிப்பாக அவருக்கு தொடர்ந்து வயலின் வாசித்துவரும் வரதராஜன் சஞ்சய்க்கு ‘தம்பி உடையான்’ போல பெரிய பலம்.

மயிலாப்பூர் பார்த்தசாரதி சபாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகான சல நாட்டை ராகத்தைக் கேட்க முடிந்தது. அது அடிக்கடி பாடும் மோகனம், காம்போதி, கல்யாணி போன்ற ராகங்களாக இருந்தாலும், சற்று அபூர்வமாக பாடுபவைகளாக இருந்தாலும், எல்லாவற்றிலும் தனது ஆழ்ந்த ஞானத்தை வெளிப்படுத்துவது சஞ்சய் சங்கீதத்தின் உயர்வைக் காட்டுகிறது. அடுத்தது, ஒரு ராகத்தை நான்கு வினாடி இழுப்பதற்கு முன்பே ‘இது இன்ன ராகம்’ என்று ரசிகன் சொல்லிவிடும் அளவிற்கு அந்த ராகத்தின் ஜீவனைத் தொட்டுவிடும் சாமர்த்தியம் இவருக்கு உண்டு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு… ஒரு புகழ் பெற்ற பாடகர், நாரதகான சபாவில் ராகம் பாட, பக்கத்திலிருந்தவர், எனகு முன்பு ‘இது வலஜி’ என்று அவசரமாக சொல்லிவிட்டு தான் கண்டுபிடித்ததை எண்ணி தனக்குத் தானே சந்தோஷப்பட்டுக் கொண்டார். எனக்கு அவர் சொன்னதில் சந்தேகம். காரணம் வலஜி ஸ்வரங்கள் முழுமையாக இல்லை. அந்தப் பாடகர் ராகம் பாடி, வயலின் வாசித்து முடித்தபின் ‘மனஸா எடுலோ’ என்று ஆரம்பித்தார். கீர்த்தனையை வைத்துப் பார்த்தால் வித்வான் பாடியது மலையமாருதம்! பக்கத்திலிருந்தவர் இப்போது என்னைப் பார்த்து அசடு வழிந்தார். இப்படி இரண்டு ராகங்களையும் குழப்பிய சீனியர் இன்றும் கணீரென்று பாடிக்கொண்டிருக்கிறார். நல்ல கூட்டம் வருகிறது. எல்லாம் ஐயப்பனுக்குத்தான் வெளிச்சம்!

இதையும் படியுங்கள்: மெஹபூப்களின் நாகஸ்வரம்

எதற்கு இந்தக் கதை என்றால், சஞ்சயிடம் இந்தக் குழப்பமெல்லாம் என்றும் கிடையாது. நல்ல படாந்திரம் உள்ளவர்களுக்கே அந்தத் தெளிவு இருக்கும். சல நாட்டைக்குப் பிறகு சஞ்சய் எடுத்துக்கொண்டது கரகரப்ரியா. இறைவனுக்கு அலங்காரம் செய்வதுபோல அந்த ராகத்திலுள்ள வெவ்வேறு வண்ண மலர்களை ஒவ்வொன்றாக எடுத்து பாதம் முதல் கழுத்துவரை பதித்து அழகு பார்த்தது பிரமாதம். சமீபகாலமாக இவர் மூச்சுப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார் என்பது என் யூகம்… அவ்வப்போது ‘தம்’பிடித்து ஸ்ருதியோடு நீண்ட நேரம் நின்று ரசிகர்களிடம் ‘பலே’ பெற்றார். இந்த நல்ல பாடகரிடம் உள்ள ஒரே பிரச்சனை, சற்று அசெளகரியமான குரல். எப்போதும் மூக்கடைத்தது போன்ற குரலில் மேலே சஞ்சாரம் பண்ணும்போது திணறுகிறார். அதனாலேயே நெஞ்சு நிறைய ஞானம் இருந்தும் ஓரளவுக்குமேல் தார ஸ்தாயியிற்கு போக குரல் மறுப்பது தெரிகிறது. அந்த கட்டை தொண்டையை வைத்துக்கொண்டு எம்.டி.ராமநாதன் போராடவில்லையா? இன்றும் ரீதிகெளளை என்றால் அவர் நினைவுதானே வருகிறது..? இவரும் போராடுகிறார்! அவ்வப்போது நாதஸ்வர சங்கதிகளை எடுத்து விடுவது சஞ்சயின் மற்றொரு பலம்.

கரகரப்ரியாவில் தானம் முடித்து பல்லவியில் நிரவல் பாடும்போதும், ஸ்வரத்தின் போதும்தான் கணக்கில் கில்லாடி என்பதை நிரூபித்தார். கூட்டி குறைத்தது எல்லாம் எம்.எஸ்ஸி கணிதம்! வயலின் வரதராஜன் சளைக்காமல் வாங்கி வாசித்தது இவர்களுக்குள் உள்ள அருமையான புரிதலை அறிந்துகொள்ள முடிந்தது.

இதையும் படியுங்கள்: செம்பொன்குடி சீனிவாச அய்யரின் கதை

கச்சேரியின் பின் பகுதியில் பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலை அனுபவித்துப் பாடினார் சஞ்சய். பேஷான தேஷ் அது! இந்தப்பாடலுக்கு தேஷ் ராகத்தைத் தேர்ந்தெடுக்க தனக்கு இரண்டு வருடங்கள் ஆனது என்று ஒரு பழைய பேட்டியில் கூறியிருக்கிறார் தண்டபாணி தேசிகர்!.

அண்மைகாலமாக தனது பல கச்சேரிகளில் பாடுவதைப்போல இந்தக் கச்சேரியிலும் இறுதியாக 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாயவரம் வேத நாயகம் பிள்ளையின் ‘பணமே உன்னால் என்ன குணமே’ பாடலைப் பாடினார். கருத்தான மாண்டு ராக பாடல். சேகர்ரெட்டி சகாக்கள் உள்பட பலர் சட்டென நினைவுக்கு வர, ரசிகர்கள் கைதட்டினர். பணம் எப்படி மனிதனை பாடாய் படுத்துகிறது என்கிறது பிள்ளையின் பாடல்! அதனால் ‘கிட்டே வராதே’ என்கிறார் பிள்ளை. கைதட்டியவர்கள் ஏதோ பணத்திற்கு ஆசைப்படாத ஆத்மாக்கள் போல ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து உணர்ச்சி வயப்பட்டது எனக்கு கூடுதல் தமாஷ்! இதே போன்றதொரு பாடலை என்.எஸ். கிருஷ்ணனும் அந்தக் காலத்தில் பாடியிருக்கிறார்! சஞ்சயின் பணப்பாட்டு இந்த சீசனின் சூப்பர் ஹிட்!

இருக்கையைவிட்டு எழும்போது ஒருவித மன நிறைவு-தரமான கச்சேரி கேட்டோம் என்ற ஆத்ம திருப்தி அது! பாடகர்களில் டி.எம்.கிருஷ்ணா, அபிஷேக் ரகுராம் போன்ற ஒரு சிலரே இந்தத் திருப்தியைத் தருகின்றனர்.

இதையும் படியுங்கள்: அருணா காட்டில் மழை

1 கருத்து

  1. //அந்த கட்டை தொண்டையை வைத்துக்கொண்டு எம்.டி.ராமநாதன் போராடவில்லையா? //

    சஞ்சயின் குரலுக்கென்று ஒரு அழகு உள்ளாது – அதை கட்டை குரல் என்று பொதுவாக சொல்லி விட முடியாது… எம் டி ஆரின் குரலோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறு…

ஒரு பதிலை விடவும்